காவேரி அன்னை கரைபுரண்டோடி அருள்பாலித்து நீர்வளமும், நிலவளமுமாய் – பச்சைப் பட்டாடை போர்த்திக் கொண்டு வளமுடன் திகழும் பூமி – தஞ்சை பூமி. ‘தஞ்சையைத் தஞ்சம் அடைந்தார்க்குப் பஞ்சம் ஏது?’ என்ற பெருமிதம் கொண்ட அம்மண்ணை ஒட்டி உள்ள வளமான சிற்றூர் இராமச்சந்திரபுரம். இதனை ஐயன் பேட்டை என்ற மாற்றுப் பெயரிலும் வழங்குவதுண்டு. ஐயன் பேட்டை இன்று ஐயம்பேட்டையாக மருவி விட்டதும் உண்டு.
வளமும் பெருமையும் கொண்ட இவ்வையம்பேட்டை என்னும் ஊரின்கண் நன்னுசாமி பாகவதரின் ஐந்தாம் திருக்குமாரராக 18-2-1781 இல் பிறந்தவர் கர்நாடக இசை உலகின் விடி வெள்ளியாக மின்னும் வேங்கடரமண பாகவத சுவாமிகள்.
ஸௌராஷ்ட்ர இன மக்கள் இறைநெறியில் ஆழ்ந்த பற்றுக் கொண்ட மரபினர். அம்மரபு வழி பிறழாது ஸௌராஷ்ட்ர இனத்தின் மாணிக்கமாய் அவதரித்த வேங்கடரமண பாகவதரும் இளம் பருவம் தொட்டே கண்ணன் மீது மாறாக் காதல் கொண்டவராய், பாமா ருக்மணி புடை சூழ காட்சி தரும் கண்ணனை வழி பட்டும் பூசித்தும் வந்தார். ஆன்மாவிற்கு உணவு ஊட்ட கண்ணனை பூஜித்த அவரது கரங்கள் – வயிற்றுக்கு உணவு ஊட்ட குலத் தொழிலான நெசவுத் தொழிலிலும் தீவிர ஈடுபாடு காட்டுன.
கால ஒட்டத்தில் தறியின் சுநாதமும் கண்ணணின் குழலோசையும் மீறி ஏதோ ஒன்று எங்கோ அவரை இழுத்தது. அது என்ன? புரியாது திகைத்தவருக்கு – காலம், அதற்கான பதிலைக் காட்டிக் கொடுத்தது. அது – அந்த பதில்—
ஐயம் பேட்டையிலிருந்து எட்டு கல் தொலைவில் உள்ள திருவையாற்றில் இருந்தது.
திருவையாறு என்றாலே நாம் அறிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான்!
இராமபிரானைப் பண்ணில் வடித்து, கர்நாடக இசையில் செதுக்கி நம்மிடையே தவழ விட்ட மகான் தியாகராஜ சுவாமிகள் – என்பது தான் அது.
இராமனையே சரணடைந்த தியாகராஜசுவாமிகளின் இசைப் பெருமை நாடு முழுவதும் தவழும் போது – அது – நம் வேங்கடரமணரையும் ஈர்த்ததில் வியப்பிருக்க இயலாது தான்.
காலையில் தறியின் சுநாதம் – மாலையில் இசையின் சுநாதம் – இதுவே தம் வாழ்க்கையின் வேதம் என்ற முடிவிற்கு வந்தார் வேங்கடரமணர். பகல் முழுவதும் காலும் கையும் வேகமாக இயங்க வண்ண ஆடைகளை உருவாக்கியவர் – சூரியன் மறையத் தொடங்கியதுமே – எட்ட நடை போட்டு எட்டு மைல் தொலைவையும் கடந்து திருவையாற்றின் புனித மண்ணைத் தொட்டு உள்ளம் எல்லாம் குளிர ஆனந்தத்தில் துள்ள தியாகராஜ சுவாமிகளின் இல்லத்தை அடைவார். அங்கே –
இசை மழை – தேன் மழையாய்ப் பொழிந்து கொண்டிருக்கும். ஆம், தியாகராஜ சுவாமிகள் தம் மாணவர்க்கு இசையறிவு ஊட்டிக் கொண்டிருப்பார். இந்த இசை தான் வேங்கட ரமணரை எட்டுக்கல் தொலைவையும் எட்ட வைத்த இசை. இந்த இசை மழையில் நனைந்து குளித்து இன்புறத்தான் வேங்கட ரமணர் பித்தனாய் ஓடி வந்திருக்கிறார். வந்தவர் –
தம்மையே மறந்து – உலக நினைவுகளையும் துறந்து – உன்னத நிலையில் உயர்ந்து இசையோடு ஒன்றி விடுவார்.
இது ஒருநாள் – இரண்டு நாள் நிகழ்ச்சி அல்ல. இரண்டு ஆண்டு காலம் நாள் தவறாமல் தொலைவின் மயக்கம் கொள்ளாமல் — ஓடி வந்து தியாகராஜ சுவாமிகளின் வீட்டுத் திண்ணையின் மூலை ஓன்றில் ஒன்றியவாறு இசை இன்பம் அன்பவித்து வந்திருக்கிறார். அந்த அனுபவத்திலேயே – கற்ற ஞானத்தாலன்றி – வெறும் கேள்வியறிவினாலேயே இசையில் தேர்ச்சியும் எய்தினார். மானசீக குருவை ஏற்று முதல் மாணவனாய்த் திகழ்ந்து குருவையே திகைக்க வைத்த ஏகலைவனைப் பற்றி நாம் புராணத்தில் படித்திருக்கிறோம். அதே நிலையில் இன்னொரு மாணவனை இங்கே ஐயம் பேட்டையில் காண்கிறோம்.
ஏகலைவனைப் போல் – குருவும் அறியாவண்ணம் – திண்ணையில் ஒண்டியவாறு – செவியில் புகுந்த இசை வெள்ளத்தினாலேயே இசை அறிவு மீதூரப் பெற்ற வேங்கடரமணனையும் -- தியாகராஜசுவாமிகளையும் ஒன்றாய் இணைத்த பெருமை வருண பகவானேயே சாரும். வருணனின் கணையான மழை பூமியை நோக்கிப் பாய – குருவும் சீடரும் இரண்டறக் கலந்தனர். அந்த நிகழ்ச்சி, வரலாற்றில் அழிக்கமுடியாது ஆழப் பதிந்து விட்ட முத்திரை அது –
அன்றொரு நாள் –
வேங்கட ரமணர் வழக்கம் போல் ஐயம் பேட்டையிலிருந்து பாதயாத்திரையாகப் பயணப்பட்டு திருவையாற்றை வந்தடைந்து தியாகராஜ சுவாமிகளின் இல்லத்து வெளித் திண்ணையில் அமர்ந்தார். உள்ளிருந்து தேவகானமாய் ,ராமநாமம் அமுதமழையைப் பொழிந்து கொண்டிருந்தது. தம்மை மறந்து வேங்கட ரமணர் இசையோடு இரண்டறக் கலந்து – சிற்பி ஒருவன் இசைக்கு மானிட உருவம் சமைத்தாற் போல் அமர்ந்திருந்தார்.
அதுவரை வெளுத்துக் கிடந்த வானம் கருக்கத் தொடங்கியது. கருந்திரையைக் கிழித்துக்கொண்டு வெளிப்பட்டன மின்னலின் வாட்படை. அந்த வாள் வீச்சுக்கு இடி பின்னனி இசைக்கத் தொடங்கியது. இப்போரின் விளைவுப் போல் – கொட்டும் குருதி போல் மேகக்குருதி – மழையாய் பொழியத் தொடங்கியது.
‘பிரளயமே வந்து விட்டதோ’ எனத் திகைக்கும் அளவுக்கு பெய்யும் மழையால் திண்ணையில் அமர்ந்துள்ள வேங்கடரமணரை அசைக்கக்கூட முடியவில்லை. தியாக பிரம்மத்தின் இசை மழையில் குளிப்பவரை இந்த மழை என்ன செய்ய முடியும்?
என்றாலும் –
மழையின் ஆக்ரோஷ வெறியாட்டத்தைக் கண்டு வீட்டிற்குள் இசை மழை பொழிந்து கொண்டிருந்த தியாக பிரும்மம் வாசலுக்கு வந்தார். அங்கே –
அழகிய இளைஞன் ஒருவன் மழையில் முழுக்க நனைந்தும் தம்மை மறந்த மோனத்தில் ஆழ்ந்து கிடக்கும் அரிய தவநிலையைக் கண்டார். திகைத்தார். இவ்விளைஞனுக்கு இசையில் உள்ள ஆழ்ந்த ஈடுபாட்டை இந்நிகழ்ச்சி அவருக்கு உணர்த்தியது. ஓடிச் சென்று அள்ளி அணைத்து ஆரத் தழுவினார். அக மிக மகிழ்ந்தார். வீட்டினுள்ளே அழைத்து வந்தார். இக்கணம் தொட்டு இனி தம்முடன் – தம் அருகில் அமர்ந்தே இசையைச் சுவைத்து மகிழ அனுமதி அளித்தார்.
ஆம்—
வருண தேவனின் அருட் கருணையால் – தியாக பிரும்மத்திற்கு கிடைத்தற்கரிய அற்புதமானதொரு மாணவன் -- வாரிசாகக் கிடைக்கப் பெற்றார். வேங்கடரமண பாகவதருக்கோ பெறற்கரியதொரு குரு – தெய்வமாக கிடைக்கப் பெற்றார். நமக்கோ கர்நாடக இசையின் உயிர்நாடியான அருமையான கீர்த்தனைகள் கிடைத்தன. இத்தனைக்கும் காரணமான
மழையைப் போற்றுதும் –
மாமழை போற்றுதும்
--என்று – ஸ்ரீவேங்கட ரமண பாகவதரின் ஜயந்தித் திருநாளில் நினைவுக் கூர்வோம். குரு – சிஷ்யர்களை இணைத்து வைத்த வருண பகவானைத் தொழுது மகிழ்வோம்.
பத்திரிக்கையில் 1983ம் வருடம் ஜனவரி மாதம் நான் எழுதி வெளிவந்த
ஸ்ரீமந் வேங்கடரமண பாகவத சுவாமிகளின் ஜயந்தித் திருநாள் சிறப்புக் கட்டுரை இது…
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
super !!!!!!!!!!!!!
Post a Comment