Monday, February 10, 2014

நாயகி ஸ்வாமிகளின் அருளுரை!

                                               

                                                   "பசித்திரு- புசித்திரு- தனித்திரு"

-- இது இராமலிங்க அடிகளாரின் அருளுரை.சாப்பிட்டுக் கொண்டும் இருக்க வேண்டும்;அதே நேரத்தில் பசியுடனும் இருக்க வேண்டும் என்று கூறுகிறாரே என்று குழப்பமடைய வேண்டாம்.

-- அடிகளாரின் இக்கருத்திற்கு நமது நாயகி ஸ்வாமிகள் அருமையான விளக்கம் தருகிறார் தமது கீர்த்தனையில் —

ஸ்வாமிகளின் விளக்கம் இதோ:-

"தீ3வடொ பா4த் பனி யோக்வடொ
கோ3 யோக்வடொ ர:னொ—ஸ்ரீ
தே3வு ப4ஜன ராதிதீ3ஸுனும்
ஹொய்லேத் ர:னொ’"

இக்கீர்த்தனை வரிகளில் நாயகி ஸ்வாமிகள் கூறுவதாவது —

"போட் மெந்து3 நீ:ஸ்தக் பா4த் ஜெமந் ஹோனா!
க்யானு ரெங்கு3 ஹுத்ரி ஜேடை3
அங்குன் ஸங்குஸ் ஐகுலுவோ"

(முன் பகுதியை இங்கு இணைக்கவும்)

வயிறு முட்ட சாப்பிடுவது என்பார்களே அப்படி வயிற்றில் துளி இடம்கூட இல்லாமல் வயிறு நிறைய உண்ணக்கூடாது என்கிறார் ஸ்வாமிகள். அப்படி யானால் எப்படி சாப்பிட வேண்டும்?விளக்கமாகச் சொல்கிறார் ஸ்வாமிகள் —

வயிற்றை நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டால் அதில் இரண்டு பங்கு உணவு — ஒரு பங்கு தண்ணீர் — ஒருபங்கு வெற்றிடம் என்ற அளவில்தான் உண்ண வேண்டும்.அதாவது பாதி அளவில்தான்(பாதி வயிறு மட்டுமே) உணவும் கால் வயிற்றில் நீரும் கால்வயிறு காலி இடமுமாக இருக்க வேண்டும்.  இதைத்தான் இராமலிங்க அடிகளாரும், "பசித்திரு- புசித்திரு" -என்று ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிப் போந்தார்.தொடர்ந்து அடிகளார், "தன்த்திரு" -என்றாரே அதையும் நாயகி ஸ்வாமிகள் தமது இதே கீர்த்தனையில் தொடர்ந்து விளக்கம் தருகிறார்.அது,இது:-

"தே3வு ப4ஜன ராதிதீ3ஸுனும்
ஹொய்லேத் ர:னொ"  —என்கிறார்.

--இரவும் பகலும் இறைவழிபாடு(பஜனை) செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற நாயகி ஸ்வாமிகளின் விளக்கத்தின் சூத்திரமே அடிகளாரின் தனித்திரு என்ற சொல் எனலாம்.

'அப்படி இரவும் பகலும் பஜனை செய்யாதவன் பூமிக்குச் சுமையாக-பாரமாக உள்ளான்'-என்று குற்றம் சாட்டுகிறார் நாயகி ஸ்வாமிகள்.

எனவே, இனியேனும் நாம் வீட்டிலோ-குறிப்பாக விருந்துகளிலோ வயிறு முட்ட முட்ட உண்டு அவஸ்தைப் படாமல் நாயகி ஸ்வாமி களும்இராமலிங்க அடிகளாரும் அவுளியதற்கொப்ப "பசித்திருப்போம்; புசித்திருப்போம், தனித்திருப்போம்"  (இறைவன் நாமத்தை விடாது ஜெபித்திருப்போம்)
அளவோடு உண்டு—வளமோடு வாழ்வோமாக!

Monday, April 22, 2013

மீனாட்சி கல்யாணம்


சோழர் குலக்கொடி காஞ்சினமாலை, வேதனை நீராய்த் திரண்டு விழிகளைக் குளமாக்கத் தன் கணவரை ஏறிட்டு நோக்கினாள். பெண்ணிற்குக் கடவுள்—கணவன்—எனவே, காஞ்சினமாலையின் விழிகள் துயரத்தில் மலையத்துவச பாண்டியனை நோக்கின. ஆனால் அவனுக்குக் கடவுள் ......... அந்த சிவபெருமான்தானே!
மனைவியையும் அவளது மடியில் தவழும் குழந்தையையும் மாறிமாறிப் பார்த்த மலையத்துவசனின் கண்களிலும் கண்ணீர்! ‘இறைவா!’’என்று நெஞ்சம் ஓலமிட,பூஜை அறையை நோக்கி கால்கள் விரைந்தன. அங்கே -----
சிவலிங்கத்தின் முன் வேரற்ற மரம்போல் சாய்ந்து வீழ்ந்தான் பாண்டிய மாமன்னன். நெஞ்சம் விம்மிட, உதடுகள் துடிக்க,’’இறைவா! குழந்தைப்பேறு இல்லையே என்று தவித்துபுத்திரகாமேஷ்டி யாகம் செய்தேன்! அரசாள வாரிசாக எனக்கொரு செல்வனை நீ தருவாய் என்று மனமாற நம்பி வேள்வி வளர்த்தேன்..ஆனால்....ஆனால்...அந்த வேள்வியில் தோன்றியதோ...ஒரு பெண் குழந்தை....அதுவும் மூன்று வயது நிரம்பி மூன்று தனங்களுடன் இந்தப் பெண் குழந்தையை ஏன் தந்தாய்? பகைவர் எள்ளி நகையாடவா? வாழ்நாள் முழுவதும் நான் வேதனைத் தீயில் வெந்து சாகவா?’’என்றெல்லாம் கண்ணீர் மல்கத் தன் மனத்துயரை மாதேவன் திருமுன் கூறிப்புலம்பினான் மலையத்துவசப்பாண்டியன்.
அப்போது -----
வானொலி ஒலித்த்து. அது – இது ;-
‘’மலையத்துவசா! மனம் கலங்காதே! மகளை-மகனாகப் பாவித்து வளர்த்து முடி சூட்டு. தக்க மணாளன் வரும் போது ஒரு தனம் மறையும். உன் குலம் வளரும்; வாழும்; செழிக்கும்; நிலைக்கும்!’’
அமுத வாக்கு மன்னனின் செவிவாசல் வழியே உள்ளத்தில் புகுந்து முகத்தில் மலர்ச்சியைத் தோற்றுவித்தது. திருவாக்குப்படி குழந்தைக்கு – ‘தடாதகை-என்னும் பெயர் சூட்டி பல்கலைப் பயிற்சிகளையும் அளித்து –
தக்கப் பருவத்தில் முடிசூட்டு விழாவையும் சிறப்புடன் நடத்தி – பாண்டிய நாட்டைக் கன்னிநாடு –என வழங்கிடும் சிறப்புடையதாக்கினான்.ஆனாலும்-
காஞ்சனமாலையின் துயரம் நீங்கியபாடில்லை. ‘பருவம் எய்தியும் மகளுக்கு மணம் கூடி வரவில்லையே!-என்ற அன்னையின் வேதனை தடாதகைப்பிராட்டியாரின் உள்ளத்தையும் தொட்டது.அன்னைக்கு ஆறுதல் கூறி,’’அகிலத்தை வென்று வருகிறேன்!’’-என்று சூழுரைத்து –அனுமதி பெற்று நால்வகைப் படைகளும் திரண்டெழ –திக்விஜயம் புறப்பட்டார் – தடாதகைப்பிராட்டியார்.
கயபதி,துரகபதி,நரபதி—முதலான வடபுல மன்னர்கள் தோற்று ஓடினர். ‘எதிர்க்கும் திறன் படைத்தோர் இல்லை-என்னும்படி வெற்றி முழக்கத்துடன் பாண்டியப்படை கயிலைமலை வந்தடைந்தது. ஆம், மலையரசனின் மகளும் – பராசக்தியுமான தடாதகைப்பிராட்டி மீண்டும் தன்னிடத்தே வந்தது கண்டு வரவு கூறுவது போல் அருவிகள் சிரித்தன.
‘’ வானார் கயிலை மலையான் மகள் தன்னை நீத்துப் போனாள் வந்தாள்
போர் முழக்கம் கயிலையையே ஆட்டிப்படைத்தது.
சிவபெருமானின் ஆணை நந்திதேவரை நோக்கி விரைந்தது.
சிவகணங்களுடன் தடாதகைப்பிராட்டியை எதிர்த்துப் போரிட சீறி எழுந்தார் திருநந்தித்தேவர்.கடுமையானப் போர்...கொடுமையானப் போர் .. என்று கூறும்படி கடும்போர் நிகழ்ந்தது.....சில கணங்கள்தான்—-
‘’ஆதிநாயகியின் அளப்பறிய ஆற்றலை அளப்பார் யாரே!’’
தோற்று ஓடுவதைத் தவிர வேறு வழி இல்லை- என்ற நிலையில் சிவபெருமானிடம் ஓடிவந்தார் திருநந்தித்தேவர். ‘பொன்னார் மேனியன் புன்னகைப் பூத்தார்.’’யாமே வருவோம்’’ –என்று திருவாய் மலர்ந்தார் புலித்தோல் ஆடைதரித்தவன்.
ஆதிசிவனுக்கும் ஆதிசக்திக்கும் போர்.....தொடங்.........
ஐயனைப் பார்க்கின்றாள்....அண்ணலும் நோக்குகின்றார்........
நோக்கிய விழிகள் நோக்கியவாறே நிலைக்கின்றன.
நெற்றிக்கண்ணனின் வெம்பார்வை பட்டகணமே தடாதகைப்பிராட்டியாரின் முத்தனங்களில் ஒன்று மறைந்த்து. தடாதகைப்பிராட்டியாரின் வீர உணர்வு நாண உணர்வாய் நெளிந்தோடி உடல் எங்கும் பரவசமாய்ப் பரவியது. அருகில் இருந்து இவற்றை கவனித்த அமைச்சர் சுமதியின் உள்ளத்தில் பழைய நினைவுகள் அலைமோதின. உடன் அவர் தடாதகைப்பிராட்டி யாரிடம் வான்ஒலிச் செய்தியைக் கூறி,’’அன்னையே! தங்கள் மணவாளர் இவரே!’’என்றார்.
அதை ஆமோதிப்பது போல் புன்முறுவல் தவழ சிவபெருமான் கூறினார்,’’ திக்விஜயத்தை நீ தொடங்கிய நாளில் இருந்தே நாமும் மதுரையை விட்டு உன்னைத் தொடர்ந்து வருகின்றோம். இனி நீ மதுரைக்குச் செல். யாம் விரைவில் வந்து உன்னை மணம் புரிவோம்!’’

**************** ************************** ******************
திருமணம்....தெய்வத்திருமணம்.....வர்ணிக்க வார்த்தைகள் ஏது? ஆயிரம் நா படைத்த ஆதிசேஷனாலேயே முடியாத அதை ஒரு நாக்கு கொண்ட என் எழுதுகோலால் முடியவா போகிறது?
மண்ணுலக மன்னர்களும் விண்ணுலக தேவர்களும் திரண்டிட --- பொற்கலசத்தில் உள்ள புனித நீரால் திருமால் – சிவபெருமானது சிவந்த திருவடிகளை விளக்குகிறார். ஆம்! ஒருகாலத்தில் திருமால் கண்டறிய முயன்று – வராக அவதாரமும் எடுத்து பாதாளத்தையும் குடைந்தும் – முயன்றும் காணாத் திருவடியைத் திருமால் தொட்டு விளக்கிடும் அருட் காட்சி – திருக்காட்சியாய் விரிந்த்து. இரு மலர்க் கரங்களையும் இணைத்தார். வேதமந்திர நாதம் ஒலித்தது. வேதநாயகனான நான்முகனே முன்னின்று நடத்தி வைக்க-சிவபெருமான்—தடாதகைப்பிராட்டியாரின் கழுத்தில் மங்கலநாண் பூட்டினார்.
உலகம் களித்தது; செழித்த்து; மணவிழா நிறைவுற்றது;
மங்கல ‘மணிநாதம் முழங்கிற்று!
**************** ******************** *********************
தடாதகைப்பிராட்டியார் நிறைந்த உள்ளத்துடன் அமர்ந்திருந்தார். குறை(ந்த)உள்ளத்துடன் சமையற்காரர்கள் பிராட்டிமுன் வந்து தொழுது நின்றனர். வந்தவர்கள் அம்மையிடம்,’’அம்மையே!விருந்தினர் யாவரும் உண்டு முடித்த பின்னும் எஞ்சி உள்ள உணவு இமயத்தையும் விஞ்சிடும் அளவு உள்ளதே!’’என்று குறை இரந்தனர். அதைக் கேட்ட பிராட்டி சுந்தர பாண்டியனான—சிவபெருமானை நோக்கினார்.
சிரித்தார் --- சிவபெருமான்!
குண்டோதரனின் வயிற்றில் வடவைத் தீயைப் புகுத்தினார்.
அடுத்த கணமே----
சுந்தரபாண்டியனின் குடையைத் தாங்கி வரும் குண்டோதரன் ----
‘’பசி ---பசி’’-என்று துடித்தான்.
‘’புசி –புசி’’-என்று உணவை மலையாய் கொட்டினர் சமையற்காரர்கள். அரை நொடியில் மலையாய்க் குவிந்த உணவுகளைத் தின்று தீர்த்த பின்னும் அவனது பசி அடங்கவில்லை.அனைவரும் திகைத்தனர். ஆனாலும் சோமசுந்தரக் கடவுள் அன்னபூரணியை அழைத்தார். அக்கணமே நான்கு திசைகளில் இருந்தும் நிலத்தைக் கிழித்துக் கொண்டு அன்னக் குழிகள் தோன்றின. அதில் இருந்து சுவையான தயிர் அன்னம் பொங்கி எழுந்து குண்டோதரனின் பசியைத் தீர்த்த்து. ஆனால் ----
இப்போது குண்டோதரனுக்கு தாகம்......தாகம்......தாகம்......அடங்காத் தாகம்......... கிணறு—குளம்—ஏறி—என்று எல்லா நீர் நிலைகளில் உள்ள நீரை எல்லாம் குடித்தும் குண்டோதரனின் தாகம் தீரவில்லை.
‘’தாகம்...தாகம்...தண்ணீர்.....தண்ணீர்....’’என்று மூச்சு முட்ட அரற்றியபடி சோமசுந்தரப்பெருமானின் திருவடிகளில் வீழ்ந்தான் குண்டோதரன்.இறைவன் திருவுளம் கொண்டார்.தம் முடியில் உள்ள கங்கையை மதுரையில் வைகையாகப் பாய விட்டார்—குண்டோதரனின் தாகத்தைத் தீர்க்க! ஆம்! நம் தாகத்தையும்தான்! ஆனால் நாமோ---
இறைவன் அருளிய புனித கங்கையாம் வைகையை நம் அறியாமையாலும் –சிலரின் சுயநலத்தாலும் சாக்கடையாக்கிக் கொண்டிருக்கிறோம். இறைவன் கொடுப்பான்—ஆனால் அதைக் காத்துப் பயன் படுத்திக்கொள்வது நம் பொறுப்பல்லவா?கடமை அல்லவா?
நாமும் நாடும் இதை உணரும் நாள் எப்போது வரும்?
***************** *********************** **************************
குறிப்பு;- தடாதகைப்பிராட்டியார் என்பது அருள் வாக்கின்படி அன்னைக்கு இடப்பட்ட இயற்பெயர். பின் நாளில் ‘மீன் போன்ற அழகிய கண்களை உடையதாலும்—மீன் தன் நேரடிப்பார்வையிலேயே குஞ்சு பொறித்துக் காத்திடும் இயல்பு போல்—அன்னையும் தம் மக்களைத் தம் கண் பார்வையிலேயே காத்திடும் சிறப்பு நோக்கியும் மீனாட்சி என்னும் சிறப்புப் பெயர் காரணப் பெயராயும் அமைந்த்து கண்டு எண்ணிஎண்ணி மகிழத்தக்கது.
********************** ******************** ***********************
என்னால் எழுதப்பட்ட இக்கட்டுரை ‘பூஜாமணி என்ற மாத இதழில் 1979 மே மாதம் பிரசுரமாகியுள்ளது.

Tuesday, April 9, 2013

ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோவில்


மதுரை நகருக்கு வருகை தருவோர் முதலில் செல்லும் இடம் ஸ்ரீமீனாக்ஷிஅம்மன் காவில்.நாமும் கோவிலுக்குள் சென்று வருவோம் வருங்கள்.

          மீனாக்ஷியம்மன் ஸந்நிதி வழியாக கோவிலுக்குள் நுழைந்ததும் முதலில் நாம் காண்பது 'அஷ்ட சக்தி மண்டபம்' அதாவது எட்டு சக்திகளின் மண்டபம்.இதன் வாயிலில் விநாயகரும் -- முருகனும் இருபுறமும் வீற்றிருந்து வருவோருக்கு வழ்த்து கூறி வரவேற்கின்றனர்.மீனாக்ஷி-சுந்தரர் திருமணக்கோலம் சுதையில் காட்சி அளிக்கிறது.மண்டபத்தின் இருபுறமும் மீனாக்ஷியின் பிறப்பு முதல் திருமணம் வரை நடைபெற்ற காட்சிகள் ஆறு சித்திரங்களாய்ச் சாந்தில் வரையப் பட்டுள்ளன.சுருக்கமாகச் சொன்னால் கோவிலுக்குள் நுழையும் நமக்கு அக்கோவிலைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குரிய முகவுரையாக இம்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.தேங்காய், பழம் விற்கும் கடைகளும் இம்மண்டபத்திலேயே உள்ளன.

          அஷ்டசக்தி மண்டபத்தைக் கடந்ததும் 160அடி நீளம் உள்ள மீனாக்ஷிநாயக்கர் மண்டபத்தை அடைகிறோம்.இம்மண்டபம் திருமலை நாயக்கரின் அமைச்சர்களுள் ஒருவரான மீனாக்ஷிநாயக்கரின் பெயரில் அமைந்துள்ளது.மேலே யாளியும் கீழே சிறுசிறு சிற்பங்களும் கொண்ட ஆறு வரிசைத்தூண்கள் இம்மண்டபத்தை அலங்கரிக்கின்றன.இம்மண்டபத்தின் மேற்குக் கோடியில் 1008 சிறுவிளக்குகளைக் கொண்ட திருவாட்சி அழகுபட அமைக்கப்பட்டுள்ளது. பெரியபித்தளைச்சட்டத்தால் ஆக்கப்பட்டதிருவாட்சி
சிவகங்கைக் குறுநிலமன்னரால் அன்பளிக்கப்பட்டது.

          மீனாக்ஷிநாயக்கர் மண்டபத்தை கடந்ததும் நாம் அடைவது முதலிமண்டபம்.போதிய வெளிச்சம் இல்லாமையால் இம்மண்டபத்திற்கு இருட்டுமண்டபம் என்ற காரணப்பெயரும் வழங்குகிறது.இங்குள்ள பிக்க்ஷாடனர்,மோகினி,அனுசூயா,மற்றும் இம்மண்டபத்தைக் கட்டிய கடந்தைமுதலியார் ஆகிய எட்டு வகை சிற்பங்கள் அழகுமிக்கவை.இவற்றுள் மோஹினியின் சிலை உயிர் சிலையாய் எழில் சிந்தக் காட்சி அளிக்கிறது.

         முதலிமண்டபத்தை கடந்ததும் நாம் காண்பது பொற்றாமரைக்குளம். குளத்தில் இறங்கி(தண்ணீர் இருந்தால்)நீரில் நம் கால்களை நனைத்துச் சுத்தம் செய்து கொள்கிறோம்.அதோ!குளத்தின் நடுவே உள்ள பெரிய தூணிற்கு வடபுறம் சிறிய பாலம் இருக்கிறதே அதுதான் திருவள்ளுவருக்குரிய சங்கப் பலகை மிதந்த இடம் என்பர்.தென்புறச்சுவரில் திருப்பனந்தாள் திருமடத்துத் தலைவரால் அளிக்கப்பட்ட1330 திருக்குறள் பளிங்குக் கற்களில் காணப்படுகின்றன.குளத்தின் தென்மேற்கு மூலையில்  திருநீற்றுப் பிள்ளையார் அருள் சுரக்கின்றார்.குளத்தின் மேற்குப்பகுதியில்--ராணிமங்கம்மாள் கருங்கற்களால் கட்டித் தந்த முகமண்டபம் காட்சி அளிக்கிறது.இம்மண்டபத்தில் ராணிமங்கம்மாளின் உருவமும் இராமையரின் உருவமும் காட்சி அளிக்கின்றன.

         இம்மண்டபத்திற்கு எதிரில் 'சுவந்தீஸ்வரர் கோவிலும்',அதனை அடுத்து'ஊஞ்சல் மண்டபமும்' உள்ளன.இங்கு கருங்கற் தூண்களைக் கொண்ட ஊஞ்சல் மேடை இருக்கிறது.வெள்ளிக்கிழமை மற்றும் சிறப்பு நாள்களில் இம்மேடையில் அம்மனும்-சுவாமியும் எழுந்தருளப் பண்ணி,ஊஞ்சல் ஆட்டுவர்.சில சமயம் இளம் பெண்குழந்தைகளின் கோலாட்டமும் இங்கு நடைபெறுவதுண்டு.

        ஊஞ்சல் மண்டபத்தைத் தாண்டியதும் கிளிக்கட்டு மண்டபம் வருகிறது.இங்கு பெரிய கூண்டில் மீனாட்சிஅம்மனுக்கே உரிய கிளிகள் வளர்க்கப்படுகின்றன.இம்மண்டபத்தின் தூண்கள் பலவகையிலும் பெருமை
பெற்றவை.கிளிக்கூண்டு தற்சமயம் அப்புறப்படுத்தப் பட்டுள்ளன.

        கிளிக்கட்டு மண்டபத்திலிருந்து, வேம்பத்தூரார் கோபுரவாசல் வழியாக நாம் அம்மன் சந்நிதிக்குள் நுழைகிறோம்.அம்மன் கோவில் இரண்டு பிரகாரங்களைக் கொண்டது.இரண்டாம் பிரகாரத்தில் தங்கக் கொடிமரம்,திருமலைநாயக்கர் மண்டபம் போன்றன உள்ளன.இப்பிராகாரத்தில் உள்ள ஆறுகால் பீடத்தில்தான் குமரகுருபரரின், “மீனாட்சிஅம்மை பிள்ளைத்தமிழ்அரங்கேற்றப்பட்டது.இதன் வாசல் வழியாக மகாமண்டபத்தை அடைகிறோம். இதுவே முதல் பிரகாரம். பள்ளிஅறையும் இங்குதான் இருக்கிறது.
மேற்கே உள்ள கருவறையில் நுழைகின்றோம்.அருள்வடிவாய் நின்றகோலத்தில் அன்னைமீனாட்சி காட்சி தருகிறாள்.அந்த சக்தியை உளமாற--மனதாற--வணங்கிவிட்டு வெளியே வரும்போது-- நம்உடலிலும், உள்ளத்திலும்,உயிரிலும் ஒரு புதிய சக்தியே ஊற்றெடுத்துப் பாய்வதை உணருகிறோம்.இது-- இக்கோவிலின் தனிச்சிறப்பு!

        அன்னையை வணங்கிய நாம் கிளிக்கட்டு மண்டபம் வழியாக சுவாமி கோவிலுக்குச் செல்லும் போது நம்மை எதிர்நோக்கி ஆசியருளி வரவேற்கிறார்-எட்டடி உயரமுள்ள முக்குறுணி விநாயகர்.இவருக்கு விநாயகசதுர்த்தியன்று முக்குறுணி அளவு அரிசியில் கொழுக்கட்டை செய்து படைப்பர்.இதனால் இவர் இப்பெயர் பெற்றார்.விநாயகரின் அருளாசியுடன்-சுவாமிகோவிலை வலம் வந்து''கம்பத்தடிமண்டபத்தையும்'' அடைகின்றோம்.இம்மண்டபம் சிறந்த சிற்பங்களுக்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளதைக் காண்கிறோம். 12அடி உயரம் உள்ள துவாரபாலகர்களைக் கடந்து சந்நிதிக்குள் நுழைகின்றோம். முதற்பிராகாரத்தில் திருவிளையாடற்புராணம் அரங்கேற்றப்பட்ட ஆறுகால்பீடம் காட்சி அளிக்கிறது.ஆறுகால் பீடத்தைக் கடந்து, “வெள்ளியம்பலத்திற்குவருகிறோம்.கால்மாறி ஆடிய நடராசர் தரிசனம் தருகிறார்.பின்,'இந்திரவிமானம்'-எனப்படும் கருவறைக்குள் சென்று சுந்தரேஸ்வரரை வணங்குகின்றோம்.

       சுவாமியை வணங்கிவிட்டு ஆயிரங்கால் மண்டபத்திற்கு வருகிறோம்.இங்கு சிறந்த கலைப் பொருட்காட்சி நிறுவப்பட்டுள்ளது.

        ஆயிரங்கால் மண்டபத்திற்குதெற்கே உள்ள மண்டபம்-மங்கையர்க்கரசிமண்டபம். இம்மண்டபத்திற்கு தெற்கே உள்ள மருதுபாண்டியரால் கட்டப்பட்ட சேர்வைக்காரர் மண்டபத்தையும் ,அழகியமரவிதானம் கொண்ட திருக்கல்யாணமண்டபத்தையும் பார்த்து விட்டு, ஆடிவீதியை வலம் வருகிறோம்.

        கோவிலுக்கு வெளியே-கிழக்கு கோபுரத்திற்கு எதிரே உள்ள வசந்தமண்டபத்தையும்(புதுமண்டபம்) இராயகோபுரத்தையும் பார்த்த கையோடு நம் பயணம் தொடர்கிறது.

         1634—65 இல் திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட மஹாலையும், நகரின் எல்லையில் அமைந்துள்ள வண்டியூர் தெப்பக்குளத்தையும் பார்த்து விட்டு,தமுக்கம் மாளிகைக்கு வருகிறோம்.தமுக்கம் என்ற தெலுங்குச்சொல்லுக்கு 'கோடைஇல்லம்'(Summer House)என்பது பொருள்.இதன் மேல்தளம் கவிழ்த்து வைக்கப்பட்ட தாமரைமலர் போல் இருப்பதால் இதனை தாமரைமன்றம்(Lotus House)என்றும் கூறுவர்.தற் போது தமுக்கம் மாளிகையில் காந்தி கண்காட்சி சாலை(Gandhi Museum)அமைக்கப்பட்டுள்ளது.

         மதுரையின் சுற்றுபுறம்:-
        ------------------------
            மதுரையின் கிழக்கே 12கல் தொலைவில் உள்ளது 'திருமாலிருஞ்சோலை'-என்னும் அழகர் கோவில்.மலைமீது நூபுரகங்கை என்னும் சிலம்பாறு தீர்த்தம் இருக்கிறது.முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலையும் இங்குதான் இருக்கிறது.மதுரையில் இருந்து தெற்கே ஆறுகல் தொலைவில் உள்ளது திருப்பரங்குன்றம்.இது சூரனை வதைத்து தேவர்களை சிறை மீட்டு இந்திரன் மகளான தெய்வயானையை மணம் செய்து கொண்ட முருகன் மணக்கோலத்தில் காட்சி தரும் தலம்.

           முருகனின் முதல் படைவீடு திருப்பரங்குன்றம்.கடைசி ஆறாவதுபடைவீடு பழமுதிர்சோலை. முதல் படைவீடும்--கடைசி படைவீடும் மதுரையிலேயே மதுரைமாநகரின் தெய்வீகத் தன்மைக்குச்சான்றாம்.

          மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில்16கல் தொலைவில் உள்ளது மாணிக்கவாசகர் பிறந்த ஸ்தலமான திருவாதவூர்.அப்படிச் செல்லும் வழியிலேயே வைஷ்ணவத்தலங்களான திருமோகூர் காளமேகப்பெருமாள் ஆலயம், யானைமலை நரசிங்கப்பெருமாள் ஆலயம் ஆகியவை உள்ளன.மதுரைக்குக் கிழக்கே 12 கல் தொலைவில் உள்ளது திருப்புவனம்.இதைப் புஷ்பவனம் என்றும் காசிக்குச் சமமானபுனிதத்தலம் என்றும் கூறுவர்.

        இவ்வாறு மதுரைநகரும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளும் தெய்வீகச்சிறப்புடன் திகழ்வதால் மதுரை மாநகர் எக்காலமும் நீங்காச்சிறப்புடன் விளங்குகிறது.

Wednesday, April 3, 2013

தெய்வத் திருநகர்


             பரஞ்ஜோதி முனிவர்,பாண்டிய நாட்டைப் பல சிறந்த குணங்களைக் கொண்ட பெண்ணாக உருவகித்து -- மதுரை நகரை அப்பெண்ணின் அழகிய முகமாக்கிக் காட்டுகிறார்.இவ்வுலகையே அழகியப் பெண்ணாக உருவாக்கும் போது அப்பெண்ணின் மார்பில் ஒளி வீசும் பதக்கத்தைப் பாண்டிய நாடாக்கி--அப்பதக்கத்தில் மின் னும் வைரமணிக் கற்களை--பாண்டிய நாட்டிலுள்ள பிற நகரங்களாகவும் ---    -பதக்கத்தின் நடுவில் விழி பறிக்கும்--ஒளி வீசித்திகழும் சிறந்த மாணிக்கக் கல்லே மதுரை நகர் என்றும் குறிப்பிடுகின்றார்.

  (திருவிளையாடல் புராணம்--திருநகர் படலம்--3)

              அவ்வாறே -----

              'பொன்மலை எனப்படும் மேருமலை முதல் உள்ள எல்லாத் தலங்களிலும் எழுந்தருளி உள்ள லிங்கம்--மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள லிங்கத்திற்குப் பின் தோன்றியவை.--மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் அருட்குறியால்--அதில் இருந்தே மற்ற தலங்களில் உள்ள லிங்கங்கள் தோன்றின'--என்று திருவிளையாடற் புராணம் மூர்த்தி விசேடப் படலத்தின் மூன்றாம் செய்யுள் மதுரைத் தலத்தில் உள்ள சொக்கலிங்கத்தின் தொன்மையையும் சிறப்பையும் எடுத்துக் காட்டுகிறது.

              பழங்காலத்தில் மதுரை மாநகரின் தோற்றம் ''ஓர் அழகிய தாமரை மலரைப் போன்று''இருந்ததாகப் பரிபாடல் கூறுகிறது. ஏனெனில்----

               மதுரைமாநகரின் தெருக்கள் தாமரை மலரின் உள் இதழ்களைப் போல் அடுக்கடுக்காக அமைந்துள்ளன.  மீனாட்சி அம்மன் கோவில் தாமரைமலரின் நடுவில் உள்ள மொட்டைப் போல் அமைந்துள்ளது. தாமரை மலரில் உள்ள மகரந்தத் தூள்களைப்போல மதுரை நகரமக்கள் வாழ்கின்றனர். மதுரையை நோக்கி வாழ்வைத் தேடி வரும் இரவலர் கூட்டம் தாமரையில் தேன் பருக வரும் வண்டுக்கு ஒப்பாவர்.
            --என்று பரிபாடல் ஆசிரியர் உருவகித்துக்காட்டுகிறார்.

            மதுரை நகருக்கு,''விழா நகரம்''- என்ற சிறப்புப் பெயர் உண்டு.நாள்தோறும் ஏதேனும் ஒரு விழா--யாதானும் ஒரு காரணம் பற்றி-எங்கேனும் ஒரு மூலையில் நடைபெற்றுக் கொண்டே இருக்கும் தகுதி நோக்கி இச்சிறப்புப் பெயரை மதுரைமாநகர் பூண்டது.இவ்விழாக்களுள் 'எழுநாளத்தி விழா'மிகச்சிறப்பு  உடைய விழாவாகப் பண்டைய காலத்தில்--மதுரை நகரில் கொண்டாடப் பட்டதாய் இலக்கியங்களின் மூலம் அறிகிறோம்.இவ்விழா ஏழு நாள்கள் தெடர்ந்து நடைப்பெற்றதால் இப்பெயர் பெற்றது.இவ்விழாவுக்கு 'கணம்'--என்ற வேறு பெயரும் உண்டு.இவ்விழாவுக்குப் பல ஊர்களில் இருந்தும் மக்கள் திரண்டு வருவர். இச்செய்தியை'' மதுரைக் காஞ்சி-- 427--428ஆம் பாடல்களில் மிக விரிவாகக் கூறுகிறது.

            வைசை ஆறு பண்டைக்காலத்தில் வற்றாத நீர் வளமையுடன் பாய்ந்து கொண்டிருந்தது. அடிக்கடி ஆற்றில் வெள்ளம் கரைமீறிப் பெருக்கெடுத்து ஓடிவரும்.அதன் விளைவாகக் கரைப்பகுதியில் வாழும் மக்களுக்குத் தீங்கு நேராமல் காப்பதற்கு என்றே ,''கரைக்காவலர்கள்''--என்ற பணியாட்கள் நியமிக்கப் பட்டிருந்தனர்.இவர்கள் வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது கரைகளைக் காத்து நிற்பர் ----- என்று பரிபாடலின் பத்தாம் பாட்டு விவரிக்கிறது.
            ''வையை ஆற்றைக் கடப்பதற்குத் துறைகள்தோறும் பலவகை ஓடங்கள்நிறுத்தப்.பட்டிருக்கும்.

அவ்வோடங்கள் குதிரைமுகத்துடனும்,யானைமுகத்துடனும்,சிங்கமுகத்துடனும் அமைக்கப்பட்டிருக்கும்.இவை அன்றி, சிறுதுறைகளில் கட்டுமரப் படகுகளும் இருக்கும்.--என்ற செய்தியை சிலப்பதிகாரம் கூறுகிறது.இச் சிறப்பு நோக்கியே இளங்கோவடிகள்,''புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி வையை என்ற பொய்யாக் குலக்கொடி''--என்று வையை ஆற்றைப் புகழ்கின்றார்.

           கி.பி.முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பிளைனி(Pliny)என்பவரும்---கி,பி.140இல் வாழ்ந்த தாலமி (Tolemy)என்பவரும் தத்தம் காலங்களில் மதுரை சிறந்து விளங்கியமையைத் தத்தம் நூல்களில் விரிவாக எழுதியுள்ளனர்.

           சிறந்த மேனாட்டு வரலாற்றாசிரியரான(Shenoy)என்பவர் எழுதிய-(Madura the Temple City) என்ற வரலாற்று நூலில், ''திராவிட நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும்மேலாக உறைவிடமாகத் திகழ்வது மதுரை. இது தென்னிந்தியாவின் 'ஏதன்ஸ்' நகரம்.(Madura is the Athens of South India) என்று குறிப்பிட்டுள்ளார்.

             (Madura--Dt.Gazetteer) நமக்கு கீழ்க்கண்ட செய்தியைத் தருகிறது.

             மதுரை நகரில் ரோமர் குடியிருப்பு (Roman's colony) ஒன்று இருந்தது.மதுரையைச்சுற்றிலும்  உள்ள இடங்களில் ரோம நாணயங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.கி.பி.1839 இல்மதுரைக்கருகில் உள்ள திருமங்கலத்தில் தோண்டிப் பார்த்ததில் (Solidus of Zero) கண்டு பிடிக்கப் பட்டது.  கி.பி.27இல் ரோமச் சக்கரவர்த்தியான அகஸ்டஸ்சீஸரிடம் பாண்டியஅரசன் தூது அனுப்பி உள்ளான். சீஸரின் 63 தங்க நாணயங்களும், பிற மன்னர்களின் நாணயங்களும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பழனி வட்டத்தில் கலயம்புத்தூரில் -- பூமிக்கடியில் சிறுசிறு பானைகளில்இருந்தமைகண்டுபிடிக்கப்
 பட்டுள்ளன.

             மதுரைமா நகரின் கடைத்தெருக்கள் இரண்டு பிரிவுகளாக வகுக்கப்பட்டிருந்தன. அவை நாளங்காடி என்றும் அல்லங்காடி என்றும் கூறப்பட்டன.இவற்றுள்------

             நாளங்காடி என்பவை காலை முதல் மாலை வரை பகற்பொழுது மட்டும் வாணிகம் செய்யக்கூடிய கடைகளைக் கொண்டத் தெருக்கள். அல்லங்காடி என்பவை மாலை நேரத்தில் இருந்து இரவுப் பொழுதுமுழுவதும் வியாபாரம் செய்யக் கூடிய கடைகளைக் கொண்டத் தெருக்கள்.

            பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் தமிழுடனும் சைவத்துடனும் ஒன்றிப் புகழுடன் திகழ்ந்த மதுரைமாநகர் 1210க்குப் பின் முகமதியர்களின் ஆட்சிக்கு உட்பட்டது. பாண்டிய நாட்டில் ஆட்சிப் பீடத்திற்காகப் போரிட்டுக் கொண்ட சுந்தரபாண்டியன் X வீரபாண்டியன் சகோதரர்களின் பகைமையைப் பயன்படுத்திக் கொண்டான்.மாலிக்காபூர். தென்னகத்துச் செல்வங்களைக் கொள்ளையிட தெற்கே வந்த மாலிக்காபூர் சுந்தரப் பாண்டியனுக்குப் போரில் உதவி செய்து--மதுரையில் முகமதியர் ஆட்சியை நிலை நாட்டிவிட்டான்.1310 முதல் தொடர்ந்து 41 ஆண்டுகள் மதுரை முகமதியர் ஆட்சியில் இருந்தது.

          1377இல் மதுரையில் இந்துக்கள் ஆட்சி மலர்ந்தது.நாயக்கருள்1623இல் ஆட்சிக்கு வந்த திருமலைநாயக்கரே வரலாற்றில் புகழ் பெற்றவர்.இவரது தலைநகரம் திருச்சி நகரமாய் இருந்தது. இவர் அடிக்கடி நோய்வாய்ப்பட்டார்.மதுரை மீனாட்சிசுந்தரர் இவரது கனவில் தோன்றி.''மதுரைக்கு நிலையாய் வந்துவிட்டால் நோய்குணமாகும்.''--என்று கூறியமையால் இவர் தலைநகரை மதுரைக்கு மாற்றினார்.நோய் குணமாயிற்று.அந்நன்றிக் கடனாய் மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலையும் அதன் சுற்றுத் தெருக்களையும் புதுப்பித்தார். அல்லாமலும்------

          திருமலைநாயக்கரின் ஆண்டு வருமானம் 12,000,00பவுன்கள்.இவற்றில்41,000பவுன்கள் வருமானம் தரக்கூடிய நிலங்களை மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலுக்கு எழுதி வைத்தார்-என்றசெய்தியை Shenoy எழுதியுள்ள,"Madura the Temple City"-என்ற நூலின் மூலம் அறிகிறோம்.
         பாண்டியமன்னர்களின் காலத்தில் மீனாட்சிஅம்மன் கோவில் பதினான்கு கோபுரங்களுடன் திகழ்ந்தது.மாலிக்காபூலின் படையெடுப்பில் இடிந்து சிதைந்த மீனாட்சி சந்நிதியும்,சொக்கர் சந்நிதியுமே மிஞ்சின.விசுவநாதநாயக்கர் காலம் முதல் நாயக்க மன்னர்கள் செலவிட்ட 120 லட்சம் ரூபாயும்120ஆண்டு
கால உழைப்பும்--ஓரளவு மீனாட்சிஅம்மன் கோவிலுக்கு பழைய பெருமையை உருவாக்கித் தந்திருக்கிறது.

        மீனாட்சிஅம்மன் கோவிலின் பரப்பு பதினைந்து ஏக்கர்.இதன் வெளிச்சுவர் 847அடியும்792அடியும் கொண்ட நீண்ட சதுரவடிவில் அமைந்த கற்சுவர்.
        விலைமதிப்பற்ற நகைகளுக்கு மீனாட்சி ஆலயம் புகழ் பெற்றது.அந்நகைகளுள்'தொங்கலணி' மிகப்பழமையானது.

        மதுரை மட்டுமன்றி, இந்நகரைச் சுற்றி உள்ள திருப்பரங்குன்றம்,அழகர்மலை, ,திருவாதவூர் ,,திருப்புவனம்,நாகமலை,திருமோகூர்-- போன்ற பல தலங்களும் புராண,இலக்கிய,வரலாற்றுப் புகழுடன் திகழ்கின்றன.எனவே, மதுரைமாநகர் அன்றுபோல் இன்றும்--என்றும் தனிச்சிறப்புடன் திகழ்வதில் வியப்பேது?

Monday, March 25, 2013

கோவிலின் கதை


                                          
         மதுரையில் ஸௌராஷ்ட்ர இனத்தவரால் எழுப்பப்பட்ட ஆலயம்ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேஸ்வரப் பெருமாள் கோவில் என்றும் - தெற்கு கிருஷ்ணன் கோவில் என்றும்  வெடெ தவ்ரோ என்றும் பல்லாற்றானும் சிறப்புடன் குறிக்கப்படும் பெருமாளின் உறைவிடமாகும். வெடெ தவ்ரோ என்று ஸௌராஷ்ட்ர மக்களால் குறிக்கப் படும் பெயர்க் காரணம் வேங்கடாஜலபதி என்ற பெயர் ஸௌராஷ்ட்ர மொழி உச்சரிப்புக்கு ஏற்ப வெடல்பதி-என்றாகி வெடல்பதி தவ்ரொ என்பது நாளாவட்டத்தில் சுருங்கி வெடெ தவ்ரோ”-என்றாயிற்று.தொடர்ந்து இன்னொரு ஐய வினா--ஸ்ரீவேங்கடேஸப் பெருமாள் எழுந்தருளி உள்ள ஆலயம், “கிருஷ்ணன் கோவில்” -என்று அழைக்கப்படுவானேன்? என்ற ஐய வினா நம் இளையதலைமுறையினரிடையே எழின் வியப்பில்லை.இதற்கு பதில் கூறாது இக்கோவிலின் வறலாற்றை எழுதவும் இயலாது.

            இன்றைய வேங்கடேஸப்பெருமாள் கோவில் தொடக்கத்தில் --கண்ணன் மூலஸ்தானத்தில் எழுந்தருளி கிருஷ்ணன் கோவிலாகவே இலங்கிற்று.மதுரை வடக்கு மாசி வீதியில் ஒரு கிருஷ்ணன் கோவில் இருப்பதால்-- அதனின்று இதை வேறுபடுத்திக் காட்டவே சௌராஷ்ட்ரர்களால் எழுப்பப் பட்ட இவ்வாலயம் தெற்கு கிருஷ்ணன் கோவில் என்று வழங்கலாயிற்று.அடியாருக்கு இனியராக மட்டும் இன்றி அடியாருக்கும் அடியாராகவே வாழ்ந்து காட்டி--இருந்துவரும்--கண்ணன்--வாழ்ந்து தனது கிருஷ்ணாவதாரத்தை முடித்துக் கொண்ட இடம் சௌராஷ்ட்ரர்களின் ஜன்மபூமி என்பதாலோ என்னவோ சௌராஷ்ட்ரர்களுக்கு க்ருஷ்ணப் ப்ரீதி மிகுதி..அதன் விளைவாகவே----

           தனது தாய் மண்ணினின்றும்கி.பி.473 இல் புறப்பட்ட சௌராஷ்ட்ரர்.ஏறத்தாழகி.பி 1400 முதல் 1450க்குள் தமிழகத்தில் குடியேறிய சௌராஷ்ட்ரர்--தெய்வமணம் கமழும் மதுரைமா நகரில் வாழத்தொடங்கிய சௌராஷ்ட்ரர் கட்டிய இவ்வாலயத்தின் பழமை எண்ணிக்காண்டல் அரிது.எனினும் ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றே ஒருவாறு கூற இயலுகிறது. அத்துடன்----

           தொடக்கக் காலத்தில் இக்கோவிலில் உற்ஸவங்கள் எதுவும் நடத்தப்படவில்லை.பின்னரே 180 ஆண்டு முன்னரே உற்ஸவங்கள் நடத்தப்படலாயிற்று எனலாம். எவ்வாறு எனின் 1745ஆம் ஆண்டு தைத்திங்கள் மூன்றாம் நாளில் சங்கரம்மாள் உபயமாக சிம்மவாகனத்தில் இருந்தும்--பெரிய நகராவில் சாலிவாகன ஸகாப்தம்1947ம்வருஷம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதில் இருந்தும் இதனை அறிகிறோம்.அன்றியும் இவ்உற்ஸவம் நடத்துவதற்காக ஸௌராஷ்ட்ரர் அனைவரும் ஒன்று கூடி குடி வீதத்திலும் தறி வீதத்திலும் வரி வசூலித்து அப்பொருளைக்கொண்டு உற்ஸவங்களை நடத்திவந்துள்ளனர்.. அல்லாமலும் கூடலழகர் கோவிலின் குடை,சுருட்டிமேளம், தாசி முதலியனவும் இவ்உற்ஸவங்களுக்கு அனுப்பித் தந்து உதவி உள்ளனர்என்பதை 23-- 10-- 1810 ஆம் நாளிட்ட மதுரை தாலுகா தாசில்தார் குறிப்பேட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது..
      
         இவ்வாறு நம்முன்னோர் கண்ணனுக்குக் கோவில் கட்டி கொண்டாடி கும்பிட்டு வரும் வேளையில் திருப்பதி வேங்கடேஸப் பெருமாள் நம் இனப் பெரியோர்களின் கனவில் தோன்றி ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக் காட்டி "தாம் அங்கு மறைந்து புதைந்து இருப்பதாகவும்,தன்னையே எடுத்து கோவிலில் எழுந்தருளப் பண்ணி பூசனை செய்துவரவேண்டும்"-என்றும் ஆணையிட்டு மறைந்தருளினார். வேங்கடநாதன் மீது எல்லையில்லாப் பற்று உடைய ஸௌராஷ்ட்ரா இனச் சான்றோர்களும் திருமலை நாதன் காட்டிய இடத்தில் தோண்டினர்.

             அங்கே--------

    'ஸங்குசக்கர பத்3 2ட்3 ஹாத் 3தா3தி3 --பங்கஜாஸனா'-- வேங்கடேஸ்வரர் பிரஸன்னமாகி அருளியமையின் அன்று தொடங்கி இக்கோவிலை---- ஸ்ரீபிரஸன்ன வேங்கடேஸ்வரர் கோவில் என்றே அழைக்கலாயினர். தாயார் ஸ்ரீ அலர்மேல்மங்கை தாயார் என்னும் திருப்பெயருடன் எழுந்தருளி உள்ளார்.

             ஒரு சமயம்------

             மதுரையை ஆண்ட -- வரலாற்றில் உயர் இடம் பெற்ற -- மாமன்னர் திருமலை நாயக்கர் இக்கோவிலின் வழியே வருகையில்ஸ்ரீ க்ருஷ்ண ஜோதி தரிசனம் கண்டு புளகாங்கிதம் அடைந்தார்.மேனி சிலிர்ப்புற ஆனந்த பரவசமாகி ஆலயத்துள் நுழைந்தார். ஸ்ரீபிரஸன்ன வேங்கடேஸ்வர்ரைக் கண்டு பேரானந்தப் பெருங்களிப் புற்று தொழுதார். அவ்வமயம் அசரீரியாக ஆண்டவனின் ஆணை பிறந்து ஒலித்தது.திருமலைமன்னனும் அவ்வாணைவழி அர்த்த மண்டபத்தின் சுவர்களுக்குரிய கற்களை வழங்கி அர்த்த மண்டபம் எழ உதவினார்.அவ்வறே ---

             ராணி மங்கம்மாளும் நம் ஆலயத்திற்கு வருகை தந்து பேரானந்தப் பெருங்களிப்பில் இன்புற்று ஆணி முத்துமாலை போன்ற உயரிய ஆபரணங்களையும் -- உற்ஸவங்களை நடத்துவதற்காக இரண்டு கிராமங்களையும் வழங்கி உள்ளார் என்பதை சாஸனங்கள் அறிவிக்கின்றன.அவ்வாறே----

            நாமும்அப்பேரானந்தப் பெருங்களிப்பில் இன்புற நம் பெருமாளைத் தரிசிக்க வேண்டாமா? “அவ்வானந்தத் தேனை மாந்திட வாரீர் --வையகத்தீர் வாரீர் என்று எங்கள் அனைவரையும் அழைக்கின்றேன். வாருங்கள் வெடெதவ்ராவிற்குள் போவோம்!

           கோவிலுக்குள் நுழையும் முன் எதிரே கம்பீரமாகக் காட்சி அளிக்கும் 'மதுரை ஸோராஷ்ட்ர ஸபா' கட்டிடத்தைப் பார்க்கிறோம். ஸௌராஷ்ட்ர ஸபொ, மதுரொ'--என்பதை அழகிய ஸௌராஷ்ட்ர எழுத்தில் எழுதி வைத்துள்ளதைக் கண்டு களிப்பும் பெருமிதமும் நெஞ்சில் நிறைய, கோவிலின் தென்பகுதியில் கோவில் கொண்டருளி உள்ள காவல் தெய்வமாம் கருப்பண்ண சுவாமியைத் தொழுது ஆணை பெற்று ஆலயத்திற்குள் நுழைகிறோம்.

           இடப்புறம் கருட வாகன அறை.அதன் அருகே 360 ஆண்டுகளுக்கு முந்திய பழம் சிறப்பு பொருந்திய கண்ணாடி அறை--அதற்கு முன் தூணில் நம் முன்னோர் தம் அழகிய சிற்பங்கள்.மிகச்சிறப்பாகச் செதுக்கப்பட்டு உள்ள அச்சிற்பங்கள் நெஞ்சை கவருகின்றனவா--மயக்குகின்றனவா என்று புரியாத ரசிப்புத் தன்மையுடன் கேட்கிறோம், “யார் இவர்கள்?” சிற்பத்தைப் பார்த்ததும் 'ஸௌராஷ்ட்ரர்'-என்று கூறத்தகும் வகையில் அவ்வளவு தெளிவாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளன.உடனே கிடைக்கிறது பதில்!

          துவஜஸ்தம்ப மண்டப பத்தி கைங்கரியம் செய்த கோவி (சுக்கே)வேங்கடாஜலபதி ஐயர் அவர்களே தம் இரு துணைவியருடன் சிற்ப வடிவில் அத்தூணில் காட்சி அளிக்கிறார்.தொடர்ந்து ராணி சாரீஸ் நிறுவனத்தாரால்  2--9--1973இல் அருள் உள்ளத்துடன் எழுப்பப் பட்ட ஸ்ரீமந் நடனகோபால நாயகிகள் சந்நதி. பிரம்மச்சாரியாகவும் --- கண்ணனின் நாயகியாகவும் வாழ்ந்த நாயகி சுவாமிகளின் சந்நதியைக் கடந்ததும்-- பெரும் பிரமச்சாரியான அனுமரின் பேருருவம் அஞ்சலி பா4வத்தில் நமக்கு அருள் பாலிக்கக் காண்கிறோம். 23--1--1967ல் திரு B.N.சுப்புராமையர் அவர்களின் கைங்கரியமாய் எழுந்தருளி உள்ள அஞ்சலி அனுமாரைத் தரிசித்து விட்டு இல படிகள் மேலேறுகிறோம். கருடாழ்வாரைத் தொழுத கையுடன் கண்ணனின் கர்ப்பகிரகத்தில் நிற்கிறோம்.

            அடுத்து----

            ஆச்சாரியார் ராமாநுஜருடன்--- திவ்வியப்பிரபந்தம் அருளிய ஆழ்வார்கள் பன்னிருவர் தரிசனம் அளிக்கின்றனர். அம்மட்டோ----

           ஆழ்வாராதியர் சந்நிதியின் இருபுற தூண்களிலும்ஸ்ரீவேங்கடரமண பாகவதரும்---ஸ்ரீமந் நடனகோபால நாயகி ஸ்வாமிகளும் சிற்ப உருவில் காட்சி அளித்து நம் சிந்தையை அள்ளுகின்றனர்.தொடர்ந்து நடக்கிறோம்.

           சந்திர விமானத்துடன் கூடிய தாயார் சந்நிதி...செந்தாமரைமலர்மேல் வாசம் புரியும் அலர்மேல் மங்கைத் தாயாரைத் தரிசித்து அவரது கருணைநிறை அருளைப் பெறுகின்றோம்.

           தாயார் சந்நிதி எதிரே உள்ள தூணில் சிற்பவடிவில் எழுந்தருளி உள்ள பைரவரையும் அவரது வாகனத்தையும் நன்றியோடு நோக்கி வணங்குகிறோம்.தாயார் சந்நிதியை வலம் வந்து பாதமலர் போற்றித் தொழுது பெருமாளின் சந்நிதி முன் வந்து நிற்கின்றோம். மாயாகூட விமானத்தின் கீழ் ஸ்ரீபிரஸன்ன வேங்கடேஸப் பெருமாள் காட்சி அளிக்கிறார். தாமே விரும்பி -- தமது பேரருட் பெருங்கருணை வெள்ளத்தால் நம்மைப் புனிதப்படுத்தி அருளுவதற்கென்றே எழுந்தருளி உள்ள ஐயனைக் காணக் கண்கள் கோடி வேண்டும்.! அம்மட்டோ ---

           பெருமாள் சந்நிதிக்குள் நுழையும்முன் விக்கினங்களை நீக்கி அருளும் விநாயகராம்ஸ்ரீதும்பிக்கை ஆழ்வார் அருட் காட்சி அளிக்கிறார்.ஆறுகால் மண்டபத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றனர்.இம்மண்டபத்தின் அடிச்சிற்பங்களும் சிறப்பாய் அமைந்துள்ளன.அவற்றுள் தாயார்--கருடாழ்.வார்-- துவாரபாலகர் -- சொல்லின் செல்வர் --ஆண்டாள்-- நரஸிங்கப்பெருமாள் ஆகியோரின் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கன. அன்றியும்-------

            பெருமாளின் கருவறையின் ஒருபால்-- ஸௌராஷ்ட்ர மொழியின் எழுத்துகள் -- உயிர் எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகளும் செதுக்கப் பட்டுள்ளன. மறுபால் தேசியமொழியான ஹிந்தி எழுத்துக்குப் பயன் படுத்தப்படும் நாகரி எழுத்தில் நீதிஸம்புவின் 12வது ஸ்லோகம்செதுக்கப்பட்டுள்ளது. இதன்வழி நம் முன்னோர் தாய்மொழிப் பற்றுடன் தேசியப் பற்றையும் இறைப் பற்றுடன் இணைத்துப் போற்றியப் பாங்கு உய்த்துணரற்பாலது.கருவறை வெளிச்சுற்றுச் சுவர்களில் தசாவதாரச்சிற்பங்களும் காட்சி அளிக்கின்றன.இவை யாவற்றையும் கண்டு களித்தவாறே பெருமாள் சந்நிதியை வலம் வந்து தொழுத நாம் இப்போது நிற்கும் இடம் ----

            ஆண்டாள் சந்நிதி! திருப்பாவை மணம் கமழும் ஆண்டாள் சந்நிதியின் முதல் தூணில் தொப்பியும் கோட்டுமாய் சேட்ஜிபோன்ற ஒரு சிற்பம் காட்சி அளிக்கிறது..அடுத்துள்ள தூண்களில் ஸௌராஷ்ட்ரா இலக்கியக் கர்த்தாக்களான பேரறிஞர் ராமராய்-- ராமாயணம் கண்ட வேங்கடஸூரி-- மூத்தப் பெருங் காவிய கர்த்தா தீப தூப தீர்த்தாரியர் ஆகியோரின் திரு உருவங்களும்-- கஜேந்திரமோட்சம்-- அனுமன் இயற்றும் சிவ பூஜை-- வள்ளி தெய்வானை புடை சூழ மயில் வாகனன் முருகனின் திருக்கோலம் ஆகியவை அழகுற செதுக்கப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் கண்டு களித்துவிட்டு இம் முச்சந்நிதிகளின் பின்புறம் வருகிறோம்.. அங்கே---

           ஸ்ரீலக்ஷ்மிஹயக்கிரீவர்--ஸ்ரீசக்கரத்தாழ்வார்--ஸ்ரீக்ஷீராப்தி நாதர்--பாண்டுரெங்கன்-ரகுமாயி -- சீதை,ராமர்,லட்டசுமணர் -- ரஸிமம்ப்பெருமாள் --வேதாந்த தேசிகர்ஆகியோரின் தனித்தனி ஸந்நிதிகளைத் தொழுகின்றோம். அவற்றுள்-------- 
   
        ஸ்ரீராமரின் ஸந்நிதிக்கு எதிரே உள்ள தூண்களில்-- ராமரின் திவ்விய தரிசனக் காட்சி--அநுமர் சீதையிடம் கணையாழி வழங்கும் காட்சி--ஆஞ்சநேயர் சஞ்சீவ பர்வத்த்தைத் தூக்கி வருதல்--ஆகியவைஒரு தூணிலும்--காளிங்க நர்த்தனம், குழல் ஊதும் ஆயர்பாடி கண்ணன், வெண்ணை உண்ணும் கள்ளக் கண்ணன் ஆகியவை மறுதூணிலும் அழகிய சிற்பங்களாகச் செதுக்கப் பட்டுள்ளன.
    
      இவை யாவற்றையும் கண்டு களித்த கண்களுடன் விஸ்வக்ஸேனரைத் தரிசித்து விட்டு -- சாலாகாரமாட ஆஞ்சநேயரையும் --சாலாகாரமாட கருடாழ்வாரையும் தொழுது வணங்கி மீண்டும் மறுபுற படிகளின் வழியே கீழே இறங்கி -- நவக்கிரகங்களை.ஒன்பது சுற்று சுற்றி வணங்குகிறோம்.நாம் ஆலயத்தையே முழுமையாகச் சுற்றிப் பார்த்த நிறைவுடன் உட்காரப் போகின்றோம்.

          அதற்குள் -------

    “விமான தரிசனமும் கிடைத்தால் பெரும் பாக்கியமல்லவா?” --என்ற எண்ணமும் எழுகிறது. திரு ராணி வெ.சுந்தர்ராவ் அவர்கள் உதவ மாடிக்குச் செல்கிறோம்.

          தாயார் சந்நிதியின் விமானத்தின் மேற்பகுதியில் சக்தியின் அருள் வடிவங்கள் சமைக்கப்பட்டுள்ளன. அவர்களுடன் குல்லாய் அணிந்த தேசிய மங்கையர் இருவர் காட்சி அளிக்கின்றனர். பெருமாள் ஸந்நிதி விமானம் தனிச் சிறப்புடன் திகழ்கிறது.இதனை கண்டு களிக்க ஒரு முழுநாள் தேவை. விமானத்தின்மேற்பகுதியில் வராக அவதாரம்-- கோவர்தனமலையைக் குடையாய்ப் பிடித்து நிற்கும் கண்ணன்--நரஸிம்மமூர்த்தி--குழல் ஊதும் கண்ணன் பாம்பணைமீது பள்ளி கொண்ட பரமன் ஆகிய சிற்பங்களும்,-- அடுத்த வரிசையில் விஸ்வாமித்திரர் யாகம் இயற்ற அதனை அளிக்க வரும் அரக்கியரிடமிருந்து ராமர் யாகத்தைக் காக்கும் காட்சி-- ராமர் வில்லை முறித்தலும் அவருடன் விஸ்வாமித்திரர்,சீதை.ஜனகர் நிற்கும் காட்சி -- ராமரிடம் சீதை பொன்மானைக் காட்டிக் கேட்டல் --வாமன அவதாரம்-- ராவணன் துறவிக் கோலத்தில் பிக்ஷை கேட்டு நிற்றலும்;சீதை அன்னமுடன் நிற்றலுமான காட்சி அசோகவனத்தில் அரக்கர் முன் சீதையின் துயரக்கோலம் -- அநுமன் சீதையிடம் கணையாழி காட்டுதல்--ராமர் பட்டாபிஷேகம் ஆகிய சிற்பங்கள் கலையழகுடன் காட்சி அளிக்கின்றன..அடுத்துள்ள ஆண்டாள் சந்நிதி விமானத்தில் சக்தியின் வடிவங்கள் செதுக்கப் பட்டுள்ளன.

           இவற்றையும் நான்கு நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்தையும் கண்டு களித்து விட்டு கீழே இறங்கி கோவிலை விட்டு வெளியே வருகிறோம். எதிரே யானை கட்டப் பட்டுள்ள இடத்தைப் பார்க்கிறோம்.நம் கோவிலின் யானை கம்பீரத்துடன் துதிக்கையைத் தூக்கி பிளிறியபடி நம்மை வரவேற்கிறது. ஏறத்தாழ 1895இல் நம் கோவிலில் லட்சுமணன் என்ற யானை இருந்தது.1934இல் அனந்து கோவிந்த ராயலு ஐயர், கோட்டைவீடு வெங்கிடராமய்யர் ஆகியோரின் முயற்சியால் 'வாசு'-என்கிற யானை உபயமாகப் பெறப்பட்டது.பின்னர் ஸபையின் மூலம் 'லட்சுமி''--என்ற யானையும் வாங்கப்பட்டது. பின் 1945இல்-- போரின் விளைவாய் ' யானைகள் நகரத்திற்குள் இருக்கக் கூடாது  என்று அரசு ஆணை பிறப்பித்தது. எனவே 'லட்சுமி' யானை விற்கப்பட்டது. அந்த ஆணை திரும்ப பெறப்பட்டதும் மீண்டும் கோவிலுக்கு யானை வாங்கப் பட்டது.

         இவ்வாறு ஏறத்தாழ 380 ஆண்டுகளுக்கு முன் ஸௌராஷ்ட்ர இனச்சான்றோர்களால் உருவாக்கப் பட்டு வளர்க்கப் பட்ட ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேஸப் பெருமாள்ஆலயம் என்னும் வெடெ தவ்ரோ”- இன்று மதுரை ஸௌராஷ்ட்ர ஸபையின் நிர்வாகத்தில் மிகச் சிறப்புடன் இயங்கி வருகிறது.. இவ்வாலயத்திற்கு அனுதினமும் சென்று பரமனடி போற்றி உய்த்தலே நம் பிறவிப் பயனாகும்.
     
                        ''மொதிரெத்து'' --- பங்குனி உற்சவ மலர்----- 1977