மதுரை நகருக்கு வருகை
தருவோர் முதலில் செல்லும் இடம் ஸ்ரீமீனாக்ஷிஅம்மன் காவில்.நாமும் கோவிலுக்குள்
சென்று வருவோம் வருங்கள்.
மீனாக்ஷியம்மன் ஸந்நிதி
வழியாக கோவிலுக்குள் நுழைந்ததும் முதலில் நாம் காண்பது 'அஷ்ட சக்தி மண்டபம்' அதாவது எட்டு சக்திகளின்
மண்டபம்.இதன் வாயிலில் விநாயகரும் -- முருகனும் இருபுறமும் வீற்றிருந்து
வருவோருக்கு வழ்த்து கூறி வரவேற்கின்றனர்.மீனாக்ஷி-சுந்தரர் திருமணக்கோலம்
சுதையில் காட்சி அளிக்கிறது.மண்டபத்தின் இருபுறமும் மீனாக்ஷியின் பிறப்பு முதல்
திருமணம் வரை நடைபெற்ற காட்சிகள் ஆறு சித்திரங்களாய்ச் சாந்தில் வரையப்
பட்டுள்ளன.சுருக்கமாகச் சொன்னால் கோவிலுக்குள் நுழையும் நமக்கு அக்கோவிலைப்
பற்றித் தெரிந்து கொள்வதற்குரிய முகவுரையாக இம்மண்டபம்
அமைக்கப்பட்டிருக்கிறது.தேங்காய், பழம்
விற்கும் கடைகளும் இம்மண்டபத்திலேயே உள்ளன.
அஷ்டசக்தி மண்டபத்தைக்
கடந்ததும் 160அடி
நீளம் உள்ள மீனாக்ஷிநாயக்கர் மண்டபத்தை அடைகிறோம்.இம்மண்டபம் திருமலை நாயக்கரின்
அமைச்சர்களுள் ஒருவரான மீனாக்ஷிநாயக்கரின் பெயரில் அமைந்துள்ளது.மேலே யாளியும் கீழே
சிறுசிறு சிற்பங்களும் கொண்ட ஆறு வரிசைத்தூண்கள் இம்மண்டபத்தை
அலங்கரிக்கின்றன.இம்மண்டபத்தின் மேற்குக் கோடியில் 1008 சிறுவிளக்குகளைக் கொண்ட
திருவாட்சி அழகுபட அமைக்கப்பட்டுள்ளது. பெரியபித்தளைச்சட்டத்தால்
ஆக்கப்பட்டதிருவாட்சி
சிவகங்கைக்
குறுநிலமன்னரால் அன்பளிக்கப்பட்டது.
மீனாக்ஷிநாயக்கர்
மண்டபத்தை கடந்ததும் நாம் அடைவது முதலிமண்டபம்.போதிய வெளிச்சம் இல்லாமையால்
இம்மண்டபத்திற்கு இருட்டுமண்டபம் என்ற காரணப்பெயரும் வழங்குகிறது.இங்குள்ள
பிக்க்ஷாடனர்,மோகினி,அனுசூயா,மற்றும் இம்மண்டபத்தைக் கட்டிய
கடந்தைமுதலியார் ஆகிய எட்டு வகை சிற்பங்கள் அழகுமிக்கவை.இவற்றுள் மோஹினியின் சிலை
உயிர் சிலையாய் எழில் சிந்தக் காட்சி அளிக்கிறது.
முதலிமண்டபத்தை
கடந்ததும் நாம் காண்பது பொற்றாமரைக்குளம். குளத்தில் இறங்கி(தண்ணீர்
இருந்தால்)நீரில் நம் கால்களை நனைத்துச் சுத்தம் செய்து கொள்கிறோம்.அதோ!குளத்தின்
நடுவே உள்ள பெரிய தூணிற்கு வடபுறம் சிறிய பாலம் இருக்கிறதே அதுதான்
திருவள்ளுவருக்குரிய சங்கப் பலகை மிதந்த இடம் என்பர்.தென்புறச்சுவரில்
திருப்பனந்தாள் திருமடத்துத் தலைவரால் அளிக்கப்பட்ட1330 திருக்குறள் பளிங்குக்
கற்களில் காணப்படுகின்றன.குளத்தின் தென்மேற்கு மூலையில்
திருநீற்றுப்
பிள்ளையார் அருள் சுரக்கின்றார்.குளத்தின் மேற்குப்பகுதியில்--ராணிமங்கம்மாள்
கருங்கற்களால் கட்டித் தந்த முகமண்டபம் காட்சி அளிக்கிறது.இம்மண்டபத்தில்
ராணிமங்கம்மாளின் உருவமும் இராமையரின் உருவமும் காட்சி அளிக்கின்றன.
இம்மண்டபத்திற்கு
எதிரில் 'சுவந்தீஸ்வரர்
கோவிலும்',அதனை
அடுத்து'ஊஞ்சல்
மண்டபமும்' உள்ளன.இங்கு
கருங்கற் தூண்களைக் கொண்ட ஊஞ்சல் மேடை இருக்கிறது.வெள்ளிக்கிழமை மற்றும் சிறப்பு
நாள்களில் இம்மேடையில் அம்மனும்-சுவாமியும் எழுந்தருளப் பண்ணி,ஊஞ்சல் ஆட்டுவர்.சில சமயம் இளம்
பெண்குழந்தைகளின் கோலாட்டமும் இங்கு நடைபெறுவதுண்டு.
ஊஞ்சல்
மண்டபத்தைத் தாண்டியதும் கிளிக்கட்டு மண்டபம் வருகிறது.இங்கு பெரிய கூண்டில்
மீனாட்சிஅம்மனுக்கே உரிய கிளிகள் வளர்க்கப்படுகின்றன.இம்மண்டபத்தின் தூண்கள்
பலவகையிலும் பெருமை
பெற்றவை.கிளிக்கூண்டு
தற்சமயம் அப்புறப்படுத்தப் பட்டுள்ளன.
கிளிக்கட்டு
மண்டபத்திலிருந்து, வேம்பத்தூரார்
கோபுரவாசல் வழியாக நாம் அம்மன் சந்நிதிக்குள் நுழைகிறோம்.அம்மன் கோவில் இரண்டு
பிரகாரங்களைக் கொண்டது.இரண்டாம் பிரகாரத்தில் தங்கக் கொடிமரம்,திருமலைநாயக்கர் மண்டபம் போன்றன
உள்ளன.இப்பிராகாரத்தில் உள்ள ஆறுகால் பீடத்தில்தான் குமரகுருபரரின், “மீனாட்சிஅம்மை
பிள்ளைத்தமிழ்” அரங்கேற்றப்பட்டது.இதன்
வாசல் வழியாக மகாமண்டபத்தை அடைகிறோம். இதுவே முதல் பிரகாரம். பள்ளிஅறையும் இங்குதான்
இருக்கிறது.
மேற்கே உள்ள கருவறையில்
நுழைகின்றோம்.அருள்வடிவாய் நின்றகோலத்தில் அன்னைமீனாட்சி காட்சி தருகிறாள்.அந்த
சக்தியை உளமாற--மனதாற--வணங்கிவிட்டு வெளியே வரும்போது-- நம்உடலிலும், உள்ளத்திலும்,உயிரிலும் ஒரு புதிய சக்தியே
ஊற்றெடுத்துப் பாய்வதை உணருகிறோம்.இது-- இக்கோவிலின் தனிச்சிறப்பு!
அன்னையை
வணங்கிய நாம் கிளிக்கட்டு மண்டபம் வழியாக சுவாமி கோவிலுக்குச் செல்லும் போது நம்மை
எதிர்நோக்கி ஆசியருளி வரவேற்கிறார்-எட்டடி உயரமுள்ள முக்குறுணி விநாயகர்.இவருக்கு
விநாயகசதுர்த்தியன்று முக்குறுணி அளவு அரிசியில் கொழுக்கட்டை செய்து
படைப்பர்.இதனால் இவர் இப்பெயர் பெற்றார்.விநாயகரின் அருளாசியுடன்-சுவாமிகோவிலை
வலம் வந்து''கம்பத்தடிமண்டபத்தையும்'' அடைகின்றோம்.இம்மண்டபம்
சிறந்த சிற்பங்களுக்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளதைக் காண்கிறோம். 12அடி
உயரம் உள்ள துவாரபாலகர்களைக் கடந்து சந்நிதிக்குள் நுழைகின்றோம். முதற்பிராகாரத்தில்
திருவிளையாடற்புராணம் அரங்கேற்றப்பட்ட ஆறுகால்பீடம் காட்சி அளிக்கிறது.ஆறுகால்
பீடத்தைக் கடந்து, “வெள்ளியம்பலத்திற்கு” வருகிறோம்.கால்மாறி ஆடிய
நடராசர் தரிசனம் தருகிறார்.பின்,'இந்திரவிமானம்'-எனப்படும் கருவறைக்குள்
சென்று சுந்தரேஸ்வரரை வணங்குகின்றோம்.
சுவாமியை
வணங்கிவிட்டு ஆயிரங்கால் மண்டபத்திற்கு
வருகிறோம்.இங்கு சிறந்த கலைப் பொருட்காட்சி நிறுவப்பட்டுள்ளது.
ஆயிரங்கால்
மண்டபத்திற்குதெற்கே உள்ள மண்டபம்-மங்கையர்க்கரசிமண்டபம். இம்மண்டபத்திற்கு தெற்கே உள்ள மருதுபாண்டியரால்
கட்டப்பட்ட சேர்வைக்காரர் மண்டபத்தையும் ,அழகியமரவிதானம் கொண்ட
திருக்கல்யாணமண்டபத்தையும் பார்த்து விட்டு, ஆடிவீதியை வலம் வருகிறோம்.
கோவிலுக்கு
வெளியே-கிழக்கு கோபுரத்திற்கு எதிரே உள்ள வசந்தமண்டபத்தையும்(புதுமண்டபம்)
இராயகோபுரத்தையும் பார்த்த கையோடு நம் பயணம் தொடர்கிறது.
1634—65 இல்
திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட மஹாலையும், நகரின் எல்லையில் அமைந்துள்ள வண்டியூர்
தெப்பக்குளத்தையும் பார்த்து விட்டு,தமுக்கம் மாளிகைக்கு வருகிறோம்.தமுக்கம்
என்ற தெலுங்குச்சொல்லுக்கு 'கோடைஇல்லம்'(Summer House)என்பது பொருள்.இதன்
மேல்தளம் கவிழ்த்து வைக்கப்பட்ட தாமரைமலர் போல் இருப்பதால் இதனை தாமரைமன்றம்(Lotus House)என்றும் கூறுவர்.தற் போது
தமுக்கம் மாளிகையில் காந்தி கண்காட்சி சாலை(Gandhi Museum)அமைக்கப்பட்டுள்ளது.
மதுரையின்
சுற்றுபுறம்:-
------------------------
மதுரையின் கிழக்கே 12கல் தொலைவில் உள்ளது 'திருமாலிருஞ்சோலை'-என்னும் அழகர்
கோவில்.மலைமீது நூபுரகங்கை என்னும் சிலம்பாறு தீர்த்தம் இருக்கிறது.முருகனின்
அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலையும் இங்குதான் இருக்கிறது.மதுரையில் இருந்து
தெற்கே ஆறுகல் தொலைவில் உள்ளது திருப்பரங்குன்றம்.இது சூரனை வதைத்து தேவர்களை சிறை
மீட்டு இந்திரன் மகளான தெய்வயானையை மணம் செய்து கொண்ட முருகன் மணக்கோலத்தில்
காட்சி தரும் தலம்.
முருகனின் முதல் படைவீடு
திருப்பரங்குன்றம்.கடைசி ஆறாவதுபடைவீடு பழமுதிர்சோலை. முதல் படைவீடும்--கடைசி
படைவீடும் மதுரையிலேயே மதுரைமாநகரின் தெய்வீகத் தன்மைக்குச்சான்றாம்.
மதுரையில் இருந்து மேலூர்
செல்லும் வழியில்16கல்
தொலைவில் உள்ளது மாணிக்கவாசகர் பிறந்த ஸ்தலமான திருவாதவூர்.அப்படிச் செல்லும்
வழியிலேயே வைஷ்ணவத்தலங்களான திருமோகூர் காளமேகப்பெருமாள் ஆலயம், யானைமலை நரசிங்கப்பெருமாள்
ஆலயம் ஆகியவை உள்ளன.மதுரைக்குக் கிழக்கே 12 கல் தொலைவில் உள்ளது திருப்புவனம்.இதைப்
புஷ்பவனம் என்றும் காசிக்குச் சமமானபுனிதத்தலம் என்றும் கூறுவர்.
இவ்வாறு
மதுரைநகரும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளும் தெய்வீகச்சிறப்புடன் திகழ்வதால் மதுரை
மாநகர் எக்காலமும் நீங்காச்சிறப்புடன் விளங்குகிறது.

No comments:
Post a Comment