பரஞ்ஜோதி முனிவர்,பாண்டிய நாட்டைப் பல சிறந்த குணங்களைக் கொண்ட பெண்ணாக உருவகித்து -- மதுரை நகரை அப்பெண்ணின் அழகிய முகமாக்கிக் காட்டுகிறார்.இவ்வுலகையே அழகியப் பெண்ணாக உருவாக்கும் போது அப்பெண்ணின் மார்பில் ஒளி வீசும் பதக்கத்தைப் பாண்டிய நாடாக்கி--அப்பதக்கத்தில் மின் னும் வைரமணிக் கற்களை--பாண்டிய நாட்டிலுள்ள பிற நகரங்களாகவும் --- -பதக்கத்தின் நடுவில் விழி பறிக்கும்--ஒளி வீசித்திகழும் சிறந்த மாணிக்கக் கல்லே மதுரை நகர் என்றும் குறிப்பிடுகின்றார்.
(திருவிளையாடல் புராணம்--திருநகர் படலம்--3)
அவ்வாறே -----
'பொன்மலை எனப்படும் மேருமலை முதல் உள்ள எல்லாத் தலங்களிலும் எழுந்தருளி உள்ள லிங்கம்--மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள லிங்கத்திற்குப் பின் தோன்றியவை.--மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் அருட்குறியால்--அதில் இருந்தே மற்ற தலங்களில் உள்ள லிங்கங்கள் தோன்றின'--என்று திருவிளையாடற் புராணம் மூர்த்தி விசேடப் படலத்தின் மூன்றாம் செய்யுள் மதுரைத் தலத்தில் உள்ள சொக்கலிங்கத்தின் தொன்மையையும் சிறப்பையும் எடுத்துக் காட்டுகிறது.
பழங்காலத்தில் மதுரை மாநகரின் தோற்றம் ''ஓர் அழகிய தாமரை மலரைப் போன்று''இருந்ததாகப் பரிபாடல் கூறுகிறது. ஏனெனில்----
மதுரைமாநகரின் தெருக்கள் தாமரை மலரின் உள் இதழ்களைப் போல் அடுக்கடுக்காக அமைந்துள்ளன. மீனாட்சி அம்மன் கோவில் தாமரைமலரின் நடுவில் உள்ள மொட்டைப் போல் அமைந்துள்ளது. தாமரை மலரில் உள்ள மகரந்தத் தூள்களைப்போல மதுரை நகரமக்கள் வாழ்கின்றனர். மதுரையை நோக்கி வாழ்வைத் தேடி வரும் இரவலர் கூட்டம் தாமரையில் தேன் பருக வரும் வண்டுக்கு ஒப்பாவர்.
--என்று பரிபாடல் ஆசிரியர் உருவகித்துக்காட்டுகிறார்.
மதுரை நகருக்கு,''விழா நகரம்''- என்ற சிறப்புப் பெயர் உண்டு.நாள்தோறும் ஏதேனும் ஒரு விழா--யாதானும் ஒரு காரணம் பற்றி-எங்கேனும் ஒரு மூலையில் நடைபெற்றுக் கொண்டே இருக்கும் தகுதி நோக்கி இச்சிறப்புப் பெயரை மதுரைமாநகர் பூண்டது.இவ்விழாக்களுள் 'எழுநாளத்தி விழா'மிகச்சிறப்பு உடைய விழாவாகப் பண்டைய காலத்தில்--மதுரை நகரில் கொண்டாடப் பட்டதாய் இலக்கியங்களின் மூலம் அறிகிறோம்.இவ்விழா ஏழு நாள்கள் தெடர்ந்து நடைப்பெற்றதால் இப்பெயர் பெற்றது.இவ்விழாவுக்கு 'கணம்'--என்ற வேறு பெயரும் உண்டு.இவ்விழாவுக்குப் பல ஊர்களில் இருந்தும் மக்கள் திரண்டு வருவர். இச்செய்தியை'' மதுரைக் காஞ்சி-- 427--428ஆம் பாடல்களில் மிக விரிவாகக் கூறுகிறது.
வைசை ஆறு பண்டைக்காலத்தில் வற்றாத நீர் வளமையுடன் பாய்ந்து கொண்டிருந்தது. அடிக்கடி ஆற்றில் வெள்ளம் கரைமீறிப் பெருக்கெடுத்து ஓடிவரும்.அதன் விளைவாகக் கரைப்பகுதியில் வாழும் மக்களுக்குத் தீங்கு நேராமல் காப்பதற்கு என்றே ,''கரைக்காவலர்கள்''--என்ற பணியாட்கள் நியமிக்கப் பட்டிருந்தனர்.இவர்கள் வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது கரைகளைக் காத்து நிற்பர் ----- என்று பரிபாடலின் பத்தாம் பாட்டு விவரிக்கிறது.
''வையை ஆற்றைக் கடப்பதற்குத் துறைகள்தோறும் பலவகை ஓடங்கள்நிறுத்தப்.பட்டிருக்கும்.
அவ்வோடங்கள் குதிரைமுகத்துடனும்,யானைமுகத்துடனும்,சிங்கமுகத்துடனும் அமைக்கப்பட்டிருக்கும்.இவை அன்றி, சிறுதுறைகளில் கட்டுமரப் படகுகளும் இருக்கும்.--என்ற செய்தியை சிலப்பதிகாரம் கூறுகிறது.இச் சிறப்பு நோக்கியே இளங்கோவடிகள்,''புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி வையை என்ற பொய்யாக் குலக்கொடி''--என்று வையை ஆற்றைப் புகழ்கின்றார்.
கி.பி.முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பிளைனி(Pliny)என்பவரும்---கி,பி.140இல் வாழ்ந்த தாலமி (Tolemy)என்பவரும் தத்தம் காலங்களில் மதுரை சிறந்து விளங்கியமையைத் தத்தம் நூல்களில் விரிவாக எழுதியுள்ளனர்.
சிறந்த மேனாட்டு வரலாற்றாசிரியரான(Shenoy)என்பவர் எழுதிய-(Madura the Temple City) என்ற வரலாற்று நூலில், ''திராவிட நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும்மேலாக உறைவிடமாகத் திகழ்வது மதுரை. இது தென்னிந்தியாவின் 'ஏதன்ஸ்' நகரம்.(Madura is the Athens of South India) என்று குறிப்பிட்டுள்ளார்.
(Madura--Dt.Gazetteer) நமக்கு கீழ்க்கண்ட செய்தியைத் தருகிறது.
மதுரை நகரில் ரோமர் குடியிருப்பு (Roman's colony) ஒன்று இருந்தது.மதுரையைச்சுற்றிலும் உள்ள இடங்களில் ரோம நாணயங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.கி.பி.1839 இல்மதுரைக்கருகில் உள்ள திருமங்கலத்தில் தோண்டிப் பார்த்ததில் (Solidus of Zero) கண்டு பிடிக்கப் பட்டது. கி.பி.27இல் ரோமச் சக்கரவர்த்தியான அகஸ்டஸ்சீஸரிடம் பாண்டியஅரசன் தூது அனுப்பி உள்ளான். சீஸரின் 63 தங்க நாணயங்களும், பிற மன்னர்களின் நாணயங்களும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பழனி வட்டத்தில் கலயம்புத்தூரில் -- பூமிக்கடியில் சிறுசிறு பானைகளில்இருந்தமைகண்டுபிடிக்கப்
பட்டுள்ளன.
மதுரைமா நகரின் கடைத்தெருக்கள் இரண்டு பிரிவுகளாக வகுக்கப்பட்டிருந்தன. அவை நாளங்காடி என்றும் அல்லங்காடி என்றும் கூறப்பட்டன.இவற்றுள்------
நாளங்காடி என்பவை காலை முதல் மாலை வரை பகற்பொழுது மட்டும் வாணிகம் செய்யக்கூடிய கடைகளைக் கொண்டத் தெருக்கள். அல்லங்காடி என்பவை மாலை நேரத்தில் இருந்து இரவுப் பொழுதுமுழுவதும் வியாபாரம் செய்யக் கூடிய கடைகளைக் கொண்டத் தெருக்கள்.
பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் தமிழுடனும் சைவத்துடனும் ஒன்றிப் புகழுடன் திகழ்ந்த மதுரைமாநகர் 1210க்குப் பின் முகமதியர்களின் ஆட்சிக்கு உட்பட்டது. பாண்டிய நாட்டில் ஆட்சிப் பீடத்திற்காகப் போரிட்டுக் கொண்ட சுந்தரபாண்டியன் X வீரபாண்டியன் சகோதரர்களின் பகைமையைப் பயன்படுத்திக் கொண்டான்.மாலிக்காபூர். தென்னகத்துச் செல்வங்களைக் கொள்ளையிட தெற்கே வந்த மாலிக்காபூர் சுந்தரப் பாண்டியனுக்குப் போரில் உதவி செய்து--மதுரையில் முகமதியர் ஆட்சியை நிலை நாட்டிவிட்டான்.1310 முதல் தொடர்ந்து 41 ஆண்டுகள் மதுரை முகமதியர் ஆட்சியில் இருந்தது.
1377இல் மதுரையில் இந்துக்கள் ஆட்சி மலர்ந்தது.நாயக்கருள்1623இல் ஆட்சிக்கு வந்த திருமலைநாயக்கரே வரலாற்றில் புகழ் பெற்றவர்.இவரது தலைநகரம் திருச்சி நகரமாய் இருந்தது. இவர் அடிக்கடி நோய்வாய்ப்பட்டார்.மதுரை மீனாட்சிசுந்தரர் இவரது கனவில் தோன்றி.''மதுரைக்கு நிலையாய் வந்துவிட்டால் நோய்குணமாகும்.''--என்று கூறியமையால் இவர் தலைநகரை மதுரைக்கு மாற்றினார்.நோய் குணமாயிற்று.அந்நன்றிக் கடனாய் மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலையும் அதன் சுற்றுத் தெருக்களையும் புதுப்பித்தார். அல்லாமலும்------
திருமலைநாயக்கரின் ஆண்டு வருமானம் 12,000,00பவுன்கள்.இவற்றில்41,000பவுன்கள் வருமானம் தரக்கூடிய நிலங்களை மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலுக்கு எழுதி வைத்தார்-என்றசெய்தியை Shenoy எழுதியுள்ள,"Madura the Temple City"-என்ற நூலின் மூலம் அறிகிறோம்.
பாண்டியமன்னர்களின் காலத்தில் மீனாட்சிஅம்மன் கோவில் பதினான்கு கோபுரங்களுடன் திகழ்ந்தது.மாலிக்காபூலின் படையெடுப்பில் இடிந்து சிதைந்த மீனாட்சி சந்நிதியும்,சொக்கர் சந்நிதியுமே மிஞ்சின.விசுவநாதநாயக்கர் காலம் முதல் நாயக்க மன்னர்கள் செலவிட்ட 120 லட்சம் ரூபாயும்120ஆண்டு
கால உழைப்பும்--ஓரளவு மீனாட்சிஅம்மன் கோவிலுக்கு பழைய பெருமையை உருவாக்கித் தந்திருக்கிறது.
மீனாட்சிஅம்மன் கோவிலின் பரப்பு பதினைந்து ஏக்கர்.இதன் வெளிச்சுவர் 847அடியும்792அடியும் கொண்ட நீண்ட சதுரவடிவில் அமைந்த கற்சுவர்.
விலைமதிப்பற்ற நகைகளுக்கு மீனாட்சி ஆலயம் புகழ் பெற்றது.அந்நகைகளுள்'தொங்கலணி' மிகப்பழமையானது.
மதுரை மட்டுமன்றி, இந்நகரைச் சுற்றி உள்ள திருப்பரங்குன்றம்,அழகர்மலை, ,திருவாதவூர் ,,திருப்புவனம்,நாகமலை,திருமோகூர்-- போன்ற பல தலங்களும் புராண,இலக்கிய,வரலாற்றுப் புகழுடன் திகழ்கின்றன.எனவே, மதுரைமாநகர் அன்றுபோல் இன்றும்--என்றும் தனிச்சிறப்புடன் திகழ்வதில் வியப்பேது?

No comments:
Post a Comment