மதுரையில் ஸௌராஷ்ட்ர இனத்தவரால் எழுப்பப்பட்ட ஆலயம் - ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேஸ்வரப் பெருமாள் கோவில் என்றும் - தெற்கு கிருஷ்ணன் கோவில் என்றும் - வெடெ தவ்ரோ என்றும் பல்லாற்றானும் சிறப்புடன் குறிக்கப்படும் பெருமாளின் உறைவிடமாகும். வெடெ தவ்ரோ என்று ஸௌராஷ்ட்ர மக்களால் குறிக்கப் படும் பெயர்க் காரணம் வேங்கடாஜலபதி என்ற பெயர் ஸௌராஷ்ட்ர மொழி உச்சரிப்புக்கு ஏற்ப
“வெடல்பதி”-என்றாகி வெடல்பதி தவ்ரொ என்பது நாளாவட்டத்தில் சுருங்கி “வெடெ தவ்ரோ”-என்றாயிற்று.தொடர்ந்து இன்னொரு ஐய வினா--ஸ்ரீவேங்கடேஸப் பெருமாள் எழுந்தருளி உள்ள ஆலயம், “கிருஷ்ணன் கோவில்” -என்று அழைக்கப்படுவானேன்? என்ற ஐய வினா நம் இளையதலைமுறையினரிடையே எழின் வியப்பில்லை.இதற்கு பதில் கூறாது இக்கோவிலின் வறலாற்றை எழுதவும் இயலாது.
இன்றைய வேங்கடேஸப்பெருமாள் கோவில் தொடக்கத்தில் --கண்ணன் மூலஸ்தானத்தில் எழுந்தருளி கிருஷ்ணன் கோவிலாகவே இலங்கிற்று.மதுரை வடக்கு மாசி வீதியில் ஒரு கிருஷ்ணன் கோவில் இருப்பதால்-- அதனின்று இதை வேறுபடுத்திக் காட்டவே சௌராஷ்ட்ரர்களால் எழுப்பப் பட்ட இவ்வாலயம் தெற்கு கிருஷ்ணன் கோவில் என்று வழங்கலாயிற்று.அடியாருக்கு இனியராக மட்டும் இன்றி அடியாருக்கும் அடியாராகவே வாழ்ந்து காட்டி--இருந்துவரும்--கண்ணன்--வாழ்ந்து தனது கிருஷ்ணாவதாரத்தை முடித்துக் கொண்ட இடம் சௌராஷ்ட்ரர்களின் ஜன்மபூமி என்பதாலோ என்னவோ சௌராஷ்ட்ரர்களுக்கு க்ருஷ்ணப் ப்ரீதி மிகுதி..அதன் விளைவாகவே----
தனது தாய் மண்ணினின்றும்கி.பி.473 இல் புறப்பட்ட சௌராஷ்ட்ரர்.ஏறத்தாழகி.பி 1400 முதல் 1450க்குள் தமிழகத்தில் குடியேறிய சௌராஷ்ட்ரர்--தெய்வமணம் கமழும் மதுரைமா நகரில் வாழத்தொடங்கிய சௌராஷ்ட்ரர் கட்டிய இவ்வாலயத்தின் பழமை எண்ணிக்காண்டல் அரிது.எனினும் ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றே ஒருவாறு கூற இயலுகிறது. அத்துடன்----
தொடக்கக் காலத்தில் இக்கோவிலில் உற்ஸவங்கள் எதுவும் நடத்தப்படவில்லை.பின்னரே 180 ஆண்டு முன்னரே உற்ஸவங்கள் நடத்தப்படலாயிற்று எனலாம். எவ்வாறு எனின் 1745ஆம் ஆண்டு தைத்திங்கள் மூன்றாம் நாளில் சங்கரம்மாள் உபயமாக சிம்மவாகனத்தில் இருந்தும்--பெரிய நகராவில் சாலிவாகன ஸகாப்தம்1947ம்வருஷம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதில் இருந்தும் இதனை அறிகிறோம்.அன்றியும் இவ்உற்ஸவம் நடத்துவதற்காக ஸௌராஷ்ட்ரர் அனைவரும் ஒன்று கூடி குடி வீதத்திலும் தறி வீதத்திலும் வரி வசூலித்து அப்பொருளைக்கொண்டு உற்ஸவங்களை நடத்திவந்துள்ளனர்.. அல்லாமலும் கூடலழகர் கோவிலின் குடை,சுருட்டிமேளம், தாசி முதலியனவும் இவ்உற்ஸவங்களுக்கு அனுப்பித் தந்து உதவி உள்ளனர்—என்பதை 23-- 10-- 1810 ஆம் நாளிட்ட மதுரை தாலுகா தாசில்தார் குறிப்பேட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது..
இவ்வாறு நம்முன்னோர் கண்ணனுக்குக் கோவில் கட்டி கொண்டாடி கும்பிட்டு வரும் வேளையில் திருப்பதி வேங்கடேஸப் பெருமாள் நம் இனப் பெரியோர்களின் கனவில் தோன்றி ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக் காட்டி "தாம் அங்கு மறைந்து புதைந்து இருப்பதாகவும்,தன்னையே எடுத்து கோவிலில் எழுந்தருளப் பண்ணி பூசனை செய்துவரவேண்டும்"-என்றும் ஆணையிட்டு மறைந்தருளினார். வேங்கடநாதன் மீது எல்லையில்லாப் பற்று உடைய ஸௌராஷ்ட்ரா இனச் சான்றோர்களும் திருமலை நாதன் காட்டிய இடத்தில் தோண்டினர்.
அங்கே--------
'ஸங்குசக்கர பத்3ம க2ட்3க ஹாத் க3தா3தி3 --பங்கஜாஸனா'--
வேங்கடேஸ்வரர் பிரஸன்னமாகி அருளியமையின் அன்று தொடங்கி இக்கோவிலை---- ஸ்ரீபிரஸன்ன வேங்கடேஸ்வரர் கோவில் என்றே அழைக்கலாயினர். தாயார் ஸ்ரீ அலர்மேல்மங்கை தாயார் என்னும் திருப்பெயருடன் எழுந்தருளி உள்ளார்.
ஒரு சமயம்------
மதுரையை ஆண்ட -- வரலாற்றில் உயர் இடம் பெற்ற -- மாமன்னர் திருமலை நாயக்கர் இக்கோவிலின் வழியே வருகையில்ஸ்ரீ க்ருஷ்ண ஜோதி தரிசனம் கண்டு புளகாங்கிதம் அடைந்தார்.மேனி சிலிர்ப்புற ஆனந்த பரவசமாகி ஆலயத்துள் நுழைந்தார். ஸ்ரீபிரஸன்ன வேங்கடேஸ்வர்ரைக் கண்டு பேரானந்தப் பெருங்களிப் புற்று தொழுதார். அவ்வமயம் அசரீரியாக ஆண்டவனின் ஆணை பிறந்து ஒலித்தது.திருமலைமன்னனும் அவ்வாணைவழி அர்த்த மண்டபத்தின் சுவர்களுக்குரிய கற்களை வழங்கி அர்த்த மண்டபம் எழ உதவினார்.அவ்வறே ---
ராணி மங்கம்மாளும் நம் ஆலயத்திற்கு வருகை தந்து பேரானந்தப் பெருங்களிப்பில் இன்புற்று ஆணி முத்துமாலை போன்ற உயரிய ஆபரணங்களையும் -- உற்ஸவங்களை நடத்துவதற்காக இரண்டு கிராமங்களையும் வழங்கி உள்ளார் என்பதை சாஸனங்கள் அறிவிக்கின்றன.அவ்வாறே----
நாமும்அப்பேரானந்தப் பெருங்களிப்பில் இன்புற நம் பெருமாளைத் தரிசிக்க வேண்டாமா? “அவ்வானந்தத் தேனை மாந்திட வாரீர் --வையகத்தீர் வாரீர் என்று எங்கள் அனைவரையும் அழைக்கின்றேன். வாருங்கள் வெடெதவ்ராவிற்குள் போவோம்!”
கோவிலுக்குள் நுழையும் முன் எதிரே கம்பீரமாகக் காட்சி அளிக்கும் 'மதுரை ஸோராஷ்ட்ர ஸபா' கட்டிடத்தைப் பார்க்கிறோம். ஸௌராஷ்ட்ர ஸபொ, மதுரொ'--என்பதை அழகிய ஸௌராஷ்ட்ர எழுத்தில் எழுதி வைத்துள்ளதைக் கண்டு களிப்பும் பெருமிதமும் நெஞ்சில் நிறைய, கோவிலின் தென்பகுதியில் கோவில் கொண்டருளி உள்ள காவல் தெய்வமாம் கருப்பண்ண சுவாமியைத் தொழுது ஆணை பெற்று ஆலயத்திற்குள் நுழைகிறோம்.
இடப்புறம் கருட வாகன அறை.அதன் அருகே 360 ஆண்டுகளுக்கு முந்திய பழம் சிறப்பு பொருந்திய கண்ணாடி அறை--அதற்கு முன் தூணில் நம் முன்னோர் தம் அழகிய சிற்பங்கள்.மிகச்சிறப்பாகச் செதுக்கப்பட்டு உள்ள அச்சிற்பங்கள் நெஞ்சை கவருகின்றனவா--மயக்குகின்றனவா என்று புரியாத ரசிப்புத் தன்மையுடன் கேட்கிறோம், “யார் இவர்கள்?” சிற்பத்தைப் பார்த்ததும் 'ஸௌராஷ்ட்ரர்'-என்று கூறத்தகும் வகையில் அவ்வளவு தெளிவாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளன.உடனே கிடைக்கிறது பதில்!
துவஜஸ்தம்ப மண்டப பத்தி கைங்கரியம் செய்த கோவி (சுக்கே)வேங்கடாஜலபதி ஐயர் அவர்களே தம் இரு துணைவியருடன் சிற்ப வடிவில் அத்தூணில் காட்சி அளிக்கிறார்.தொடர்ந்து ராணி சாரீஸ் நிறுவனத்தாரால் 2--9--1973இல் அருள் உள்ளத்துடன் எழுப்பப் பட்ட ஸ்ரீமந் நடனகோபால நாயகிகள் சந்நதி. பிரம்மச்சாரியாகவும் --- கண்ணனின் நாயகியாகவும் வாழ்ந்த நாயகி சுவாமிகளின் சந்நதியைக் கடந்ததும்-- பெரும் பிரமச்சாரியான அனுமரின் பேருருவம் அஞ்சலி பா4வத்தில் நமக்கு அருள் பாலிக்கக் காண்கிறோம். 23--1--1967ல் திரு B.N.சுப்புராமையர் அவர்களின் கைங்கரியமாய் எழுந்தருளி உள்ள அஞ்சலி அனுமாரைத் தரிசித்து விட்டு இல படிகள் மேலேறுகிறோம். கருடாழ்வாரைத் தொழுத கையுடன் கண்ணனின் கர்ப்பகிரகத்தில் நிற்கிறோம்.
அடுத்து----
ஆச்சாரியார் ராமாநுஜருடன்--- திவ்வியப்பிரபந்தம் அருளிய ஆழ்வார்கள் பன்னிருவர் தரிசனம் அளிக்கின்றனர். அம்மட்டோ----
ஆழ்வாராதியர் சந்நிதியின் இருபுற தூண்களிலும்ஸ்ரீவேங்கடரமண பாகவதரும்---ஸ்ரீமந் நடனகோபால நாயகி ஸ்வாமிகளும் சிற்ப உருவில் காட்சி அளித்து நம் சிந்தையை அள்ளுகின்றனர்.தொடர்ந்து நடக்கிறோம்.
சந்திர விமானத்துடன் கூடிய தாயார் சந்நிதி...செந்தாமரைமலர்மேல் வாசம் புரியும் அலர்மேல் மங்கைத் தாயாரைத் தரிசித்து அவரது கருணைநிறை அருளைப் பெறுகின்றோம்.
தாயார் சந்நிதி எதிரே உள்ள தூணில் சிற்பவடிவில் எழுந்தருளி உள்ள பைரவரையும் அவரது வாகனத்தையும் நன்றியோடு நோக்கி வணங்குகிறோம்.தாயார் சந்நிதியை வலம் வந்து பாதமலர் போற்றித் தொழுது பெருமாளின் சந்நிதி முன் வந்து நிற்கின்றோம். மாயாகூட விமானத்தின் கீழ் ஸ்ரீபிரஸன்ன வேங்கடேஸப் பெருமாள் காட்சி அளிக்கிறார். தாமே விரும்பி -- தமது பேரருட் பெருங்கருணை வெள்ளத்தால் நம்மைப் புனிதப்படுத்தி அருளுவதற்கென்றே எழுந்தருளி உள்ள ஐயனைக் காணக் கண்கள் கோடி வேண்டும்.! அம்மட்டோ ---
பெருமாள் சந்நிதிக்குள் நுழையும்முன் விக்கினங்களை நீக்கி அருளும் விநாயகராம்ஸ்ரீதும்பிக்கை ஆழ்வார் அருட் காட்சி அளிக்கிறார்.ஆறுகால் மண்டபத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றனர்.இம்மண்டபத்தின் அடிச்சிற்பங்களும் சிறப்பாய் அமைந்துள்ளன.அவற்றுள் தாயார்--கருடாழ்.வார்-- துவாரபாலகர் -- சொல்லின் செல்வர் --ஆண்டாள்-- நரஸிங்கப்பெருமாள் ஆகியோரின் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கன. அன்றியும்-------
பெருமாளின் கருவறையின் ஒருபால்-- ஸௌராஷ்ட்ர மொழியின் எழுத்துகள் -- உயிர் எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகளும் செதுக்கப் பட்டுள்ளன. மறுபால் தேசியமொழியான ஹிந்தி எழுத்துக்குப் பயன் படுத்தப்படும் நாகரி எழுத்தில் நீதிஸம்புவின் 12வது ஸ்லோகம்செதுக்கப்பட்டுள்ளது. இதன்வழி நம் முன்னோர் தாய்மொழிப் பற்றுடன் தேசியப் பற்றையும் இறைப் பற்றுடன் இணைத்துப் போற்றியப் பாங்கு உய்த்துணரற்பாலது.கருவறை வெளிச்சுற்றுச் சுவர்களில் தசாவதாரச்சிற்பங்களும் காட்சி அளிக்கின்றன.இவை யாவற்றையும் கண்டு களித்தவாறே பெருமாள் சந்நிதியை வலம் வந்து தொழுத நாம் இப்போது நிற்கும் இடம் ----
ஆண்டாள் சந்நிதி! திருப்பாவை மணம் கமழும் ஆண்டாள் சந்நிதியின் முதல் தூணில் தொப்பியும் கோட்டுமாய் சேட்ஜிபோன்ற ஒரு சிற்பம் காட்சி அளிக்கிறது..அடுத்துள்ள தூண்களில் ஸௌராஷ்ட்ரா இலக்கியக் கர்த்தாக்களான பேரறிஞர் ராமராய்-- ராமாயணம் கண்ட வேங்கடஸூரி-- மூத்தப் பெருங் காவிய கர்த்தா தீப தூப தீர்த்தாரியர் ஆகியோரின் திரு உருவங்களும்-- கஜேந்திரமோட்சம்-- அனுமன் இயற்றும் சிவ பூஜை-- வள்ளி தெய்வானை புடை சூழ மயில் வாகனன் முருகனின் திருக்கோலம் ஆகியவை அழகுற செதுக்கப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் கண்டு களித்துவிட்டு இம் முச்சந்நிதிகளின் பின்புறம் வருகிறோம்.. அங்கே---
ஸ்ரீலக்ஷ்மிஹயக்கிரீவர்--ஸ்ரீசக்கரத்தாழ்வார்--ஸ்ரீக்ஷீராப்தி நாதர்--பாண்டுரெங்கன்-ரகுமாயி -- சீதை,ராமர்,லட்டசுமணர் -- ரஸிமம்ப்பெருமாள் --வேதாந்த தேசிகர்ஆகியோரின் தனித்தனி ஸந்நிதிகளைத் தொழுகின்றோம். அவற்றுள்--------
ஸ்ரீராமரின் ஸந்நிதிக்கு எதிரே உள்ள தூண்களில்-- ராமரின் திவ்விய தரிசனக் காட்சி--அநுமர் சீதையிடம் கணையாழி வழங்கும் காட்சி--ஆஞ்சநேயர் சஞ்சீவ பர்வத்த்தைத் தூக்கி வருதல்--ஆகியவைஒரு தூணிலும்--காளிங்க நர்த்தனம், குழல் ஊதும் ஆயர்பாடி கண்ணன், வெண்ணை உண்ணும் கள்ளக் கண்ணன் ஆகியவை மறுதூணிலும் அழகிய சிற்பங்களாகச் செதுக்கப் பட்டுள்ளன.
இவை யாவற்றையும் கண்டு களித்த கண்களுடன் விஸ்வக்ஸேனரைத் தரிசித்து விட்டு -- சாலாகாரமாட ஆஞ்சநேயரையும் --சாலாகாரமாட கருடாழ்வாரையும் தொழுது வணங்கி மீண்டும் மறுபுற படிகளின் வழியே கீழே இறங்கி -- நவக்கிரகங்களை.ஒன்பது சுற்று சுற்றி வணங்குகிறோம்.நாம் ஆலயத்தையே முழுமையாகச் சுற்றிப் பார்த்த நிறைவுடன் உட்காரப் போகின்றோம்.
அதற்குள் -------
“விமான தரிசனமும் கிடைத்தால் பெரும் பாக்கியமல்லவா?” --என்ற எண்ணமும் எழுகிறது. திரு ராணி வெ.சுந்தர்ராவ் அவர்கள் உதவ மாடிக்குச் செல்கிறோம்.
தாயார் சந்நிதியின் விமானத்தின் மேற்பகுதியில் சக்தியின் அருள் வடிவங்கள் சமைக்கப்பட்டுள்ளன. அவர்களுடன் குல்லாய் அணிந்த தேசிய மங்கையர் இருவர் காட்சி அளிக்கின்றனர். பெருமாள் ஸந்நிதி விமானம் தனிச் சிறப்புடன் திகழ்கிறது.இதனை கண்டு களிக்க ஒரு முழுநாள் தேவை. விமானத்தின்மேற்பகுதியில் வராக அவதாரம்-- கோவர்தனமலையைக் குடையாய்ப் பிடித்து நிற்கும் கண்ணன்--நரஸிம்மமூர்த்தி--குழல் ஊதும் கண்ணன் பாம்பணைமீது பள்ளி கொண்ட பரமன் ஆகிய சிற்பங்களும்,-- அடுத்த வரிசையில் விஸ்வாமித்திரர் யாகம் இயற்ற அதனை அளிக்க வரும் அரக்கியரிடமிருந்து ராமர் யாகத்தைக் காக்கும் காட்சி-- ராமர் வில்லை முறித்தலும் அவருடன் விஸ்வாமித்திரர்,சீதை.ஜனகர் நிற்கும் காட்சி -- ராமரிடம் சீதை பொன்மானைக் காட்டிக் கேட்டல் --வாமன அவதாரம்-- ராவணன் துறவிக் கோலத்தில் பிக்ஷை கேட்டு நிற்றலும்;சீதை அன்னமுடன் நிற்றலுமான காட்சி அசோகவனத்தில் அரக்கர் முன் சீதையின் துயரக்கோலம் -- அநுமன் சீதையிடம் கணையாழி காட்டுதல்--ராமர் பட்டாபிஷேகம் ஆகிய சிற்பங்கள் கலையழகுடன் காட்சி அளிக்கின்றன..அடுத்துள்ள ஆண்டாள் சந்நிதி விமானத்தில் சக்தியின் வடிவங்கள் செதுக்கப் பட்டுள்ளன.
இவற்றையும் நான்கு நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்தையும் கண்டு களித்து விட்டு கீழே இறங்கி கோவிலை விட்டு வெளியே வருகிறோம். எதிரே யானை கட்டப் பட்டுள்ள இடத்தைப் பார்க்கிறோம்.நம் கோவிலின் யானை கம்பீரத்துடன் துதிக்கையைத் தூக்கி பிளிறியபடி நம்மை வரவேற்கிறது. ஏறத்தாழ 1895இல் நம் கோவிலில் லட்சுமணன் என்ற யானை இருந்தது.1934இல் அனந்து கோவிந்த ராயலு ஐயர், கோட்டைவீடு வெங்கிடராமய்யர் ஆகியோரின் முயற்சியால் 'வாசு'-என்கிற யானை உபயமாகப் பெறப்பட்டது.பின்னர் ஸபையின் மூலம் 'லட்சுமி''--என்ற யானையும் வாங்கப்பட்டது. பின் 1945இல்-- போரின் விளைவாய் ' யானைகள் நகரத்திற்குள் இருக்கக் கூடாது என்று அரசு ஆணை பிறப்பித்தது. எனவே 'லட்சுமி' யானை விற்கப்பட்டது. அந்த ஆணை திரும்ப பெறப்பட்டதும் மீண்டும் கோவிலுக்கு யானை வாங்கப் பட்டது.
இவ்வாறு ஏறத்தாழ 380 ஆண்டுகளுக்கு முன் ஸௌராஷ்ட்ர இனச்சான்றோர்களால் உருவாக்கப் பட்டு வளர்க்கப் பட்ட “ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேஸப் பெருமாள்” ஆலயம் என்னும் “வெடெ தவ்ரோ”- இன்று மதுரை ஸௌராஷ்ட்ர ஸபையின் நிர்வாகத்தில் மிகச் சிறப்புடன் இயங்கி வருகிறது.. இவ்வாலயத்திற்கு அனுதினமும் சென்று பரமனடி போற்றி உய்த்தலே நம் பிறவிப் பயனாகும்.
''மொதிரெத்து'' --- பங்குனி உற்சவ மலர்----- 1977

4 comments:
இவ்வளவு விவரமான கொவில் வர்லாற்றை எழுதிய மொதிரெத்து ஆசிரியரக்கு பாராட்டுகள். அதனை சிறப்பாக கோவிலின் கதை என இங்கு பதிவு செய்துள்ள திருவடி ஆசிரியர் சாரனாத் அவர்களுக்கு இனிய வணக்கங்கள்
இத்தனை நாட்கள் அறியாத வரலாற்று உண்மையை இன்று இதைப் படித்து அறிந்துக் கொண்டேன். தகவலை தெரிவித்த ஆசிரியருக்கு மிக்க நன்றி.
ஔரெ வெட தௌ4ரா வரலார் களயி ஜு4க்கு சொன்தோஷ். அத்த இல்லெ த4வ்ரா நிர்வாகி3ன் கோன் மெனி கலடுவொ.
ஓபுளா புவனேஷ்
I remebering my childhood Played days in that Temple.
Post a Comment